Published : 02 Aug 2014 10:00 AM
Last Updated : 02 Aug 2014 10:00 AM

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மீண்டும் தடை

ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. அதிகபட்சமாக விநாடிக்கு 40 ஆயிரம் கன அடியைக் கடந்து வெள்ளம் வந்தது. பின்னர் நீர்வரத்து படிப்படியாக குறைந்து கடந்த புதன் கிழமை காலை 14 ஆயிரம் கன அடிக்கும் கீழே சரிந்தது.

அருவி பகுதியில் நடைமேடை மீது புரண்டு ஓடிய வெள்ளத்தின் அளவு நடைமேடைக்கும் கீழே குறைந்தது. நீர்வரத்தும் 14 ஆயிரம் கன அடி என்ற அளவிலேயே தொடர்ந்து கொண்டிருந்தது. எனவே வியாழக்கிழமை சில நிபந்தனைகளுடன் பரிசல் இயக்குவதற்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க தொடர்ந்து தடை அமலில் இருந்தது. இன்று முதல் 3 நாட்கள் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று முதல் குளிப் பதற்கான தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கம் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், கர்நாடக மாநிலத்தில் மீண்டும் கனமழை துவங்கியிருப் பதால் கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியாற்றில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் ஒகேனக்கல்லை அடையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. விநாடிக்கு சுமார் 40 ஆயிரம் கன அடி நீர் வரலாம் என்று பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இதனால் பரிசல் இயக்கவும் மீண்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. வெள்ள நிலைமை சீரடைந்து மறு அறிவிப்பு வரும் வரை குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x