Published : 17 May 2024 05:35 AM
Last Updated : 17 May 2024 05:35 AM
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.735 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. காந்தி இர்வின் சாலை ஒட்டி இருந்த ரயில்வே குடியிருப்பு, ரயில் நிலையத்தை ஒட்டியிருந்த சில ரயில்வே அலுவலகம் ஆகியவை ஏற்கெனவே இடிக்கப்பட்டன.
இங்கு ரயில் நிலையகட்டிடங்கள், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் உட்படபல திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில் டிக்கெட் பதிவு மையம் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பதிவு மையம் தற்காலிகமாக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதாவது, பூந்தமல்லி சாலையை ஒட்டி, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலக வளாகத்தில் டிக்கெட் பதிவு மையம் செயல்பட தொடங்கியுள்ளது.
இந்த மையத்தில் தலா 3 முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படுகின்றன. மொத்தம் 15 பணியாளர்கள் 8 மணி நேர ஷிப்டு அடிப்படையில், பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய டிக்கெட் பதிவு அலுவலகம் விரைவில் இடிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT