Published : 16 May 2024 10:31 PM
Last Updated : 16 May 2024 10:31 PM
கொடைக்கானல்: “பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். அனைத்து மக்களுக்குமான பிரதமராக அவர் இருக்க வேண்டும்” என கொடைக்கானலுக்கு ஓய்வு எடுப்பதற்காக வந்துள்ள சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
கொடைக்கானலுக்கு குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வந்துள்ள சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று (மே 16) மாலை கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல்வேறு வகையான மலர்களை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார்.
அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் ஜூன் 6 வரை சட்டப்பேரவை கூட்டம் இருக்காது. கொடைக்கானலில் நடைபெறும் மலர் கண்காட்சியை குடும்பத்தினர் பார்க்க வேண்டும் என்று விரும்பினர். அதனால் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் வந்தேன்.
பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். மாற்றி மாற்றி பேசி வருகிறார். நாட்டில் உள்ள அனைவருக்கும் அவர் பிரதமர். அதனால் அவர் ஜாதி, மதம், இனம் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்குமான பிரதமராக இருக்க வேண்டும். குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை போல் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நடுத்தர மக்களுக்கான வருமான வரி அதிகமாக இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் அதிகம் வழங்கப்படுகிறது. நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் ஒரு கோடி பேர் பணிபுரிகின்றனர். சிறு, குறு நிறுவனங்கள் மூலம் 17 கோடி பேர் பணிபுரிகின்றனர். ஆனால், சிறு, குறு நிறுவனங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது.
அதனால் அவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களை அச்சுறுத்த முடியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருக்கிறார். அவருக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது” இவ்வாறு அப்பாவு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...