Last Updated : 16 May, 2024 09:38 PM

2  

Published : 16 May 2024 09:38 PM
Last Updated : 16 May 2024 09:38 PM

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதற்காக இந்த ஆண்டுக்கு ரூ.1229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த 2024-25ம் ஆண்டில் தமிழகததுக்கு 20 கோடி மனித நாட்களை அனுமதிக்கும் தொாழிலாளர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.

மேலும், நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.319 ஊதியம் வழங்கவும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, திட்டத்தில் இருந்த நிலுவைத் தொகை உட்பட ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் நிதியை தமிழகத்துக்கு கடந்த ஏப்ரல் 25ம் தேதி மத்திய அரசு ஒதுக்கியது.

இதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் 75 சதவீதம் நிதியான ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் உடன், மாநில அரசின் 25 சதவீத நிதியான ரூ.307 கோடியே 26 லட்சத்து 7,333 என ரூ.1229 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 333 ஐ பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும்படி தெரிவித்திருந்தார். இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, அந்த நிதியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் நிதி பயன்படுத்தப்பட்டதற்கான சான்றிதழை உரிய விதிகள் படி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x