Published : 16 May 2024 09:52 PM
Last Updated : 16 May 2024 09:52 PM

செய்தித் தெறிப்புகள் @ மே 16: கனமழை எச்சரிக்கை முதல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சர்ச்சை வரை

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி: வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பயிற்சிக்கான தேதியை முடிவு செய்வார்கள், என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 4ம் தேதி நாடுமுழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மே 20 வரை கனமழை நீடிக்க வாய்ப்பு: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வியாழக்கிழமை முதல் மே 20 ஆம் தேதி வரை கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமையை பொறுத்தவரையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

ஜிப்மர் அதிகாரிகளுக்கு என்சிஎஸ்சி நோட்டீஸ்!: புதுச்சேரி ஜிப்மரில் உள்ள ஜூனியர் ரெசிடென்ட் மாணவர்களில் சிலர் தாங்கள் துன்புறுத்தப்படுவதாக எழுப்பிய புகார் தொடர்பாக புதுச்சேரி அரசு மற்றும் ஜிப்மர் அதிகாரிகளுக்கு தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“மோடியின் தோல்வி உறுதி” - செல்வப்பெருந்தகை: மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற தரம் தாழ்ந்த நச்சுக் கருத்துகளை பிரதமர் மோடி பேசப் பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுகள் நியாயமற்றவை என்ற அடிப்படையில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் மனு தள்ளுபடி: பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கிடையே, பெலிக்ஸ் ஜெரால்டு கைது தொடர்பாக அவரது மனைவி ஜோன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

கேஜ்ரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எந்த ஒரு பெண்ணுக்கு எங்கு கொடுமை நடந்தாலும், நாங்கள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம்” என சுவாதி மாலிவால் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

“கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி” - பிரதமர் மோடி: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொய்களைப் பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த இண்டியா கூட்டணி முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டம் முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கருத்து தெரிவித்துள்ளார்.

“மோடியின் ஓய்வுக்கு பிறகு அமித் ஷாதான் பிரதமர்”: "அடுத்தாண்டு செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு 75 வயதாகிவிடும். அதன்பிறகு அமித் ஷாவை நாட்டின் பிரதமராக்க மோடி முடிவெடுத்துள்ளார். 75 வயதுடன் ஓய்வு பெற மாட்டேன் என்று பிரதமர் இதுவரை சொல்லவில்லை. பிரதமர் மோடி உருவாக்கிய இந்த விதியை அவரும் பின்பற்றுவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுடன் இணைந்து வியாழக்கிழமை லக்னோவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த கேஜ்ரிவால் இதனைத் தெரிவித்தார்.

சீதைக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா உறுதி: “சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட கோயிலை கட்டும். சீதா தேவிக்கு கோயில் கட்ட, நரேந்திர மோடி மற்றும் பாஜக.,வால் மட்டுமே முடியும். நாங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயிலை கட்டியவர் பிரதமர் மோடி. தற்போது, சீதை பிறந்த இடத்தில் மிகப் பெரிய கோவில் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது” என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சர்ச்சை: மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியில் ஒரேயொரு கருப்பின வீரராக ககிசோ ரபாடா மட்டுமே இடம்பெற்றுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

நிறவெறி கொடுமைகளிலிருந்து மீண்டுவந்த பிறகு இழப்புகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நேர்மறை இட ஒதுக்கீட்டு கொள்கை நடைமுறைப்படுத்தலுக்கு எதிராக இது உள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

“கராச்சியில் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்...”: இந்தியா நிலவு பயணம் மேற்கொள்கிறது. ஆனால், கராச்சியில் வாழ்ந்து வரும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர் என பாகிஸ்தான் நாட்டு எம்.பி சையத் முஸ்தபா கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்படாத இந்திய வரைபடங்களை பயன்படுத்தினால்சிறை: இந்திய ஆய்வு (சர்வே) மூலம் தயாரித்து வழங்கப்பட்ட இந்திய வரைபடங்களை மட்டுமே பயன்படுத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுமம் (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலர் மணீஸ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘மத்திய சட்ட அமைச்சகத்தால் 1990-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தத்தின் படி சர்வே ஆஃப் இந்தியாவால் வெளியிடப்பட்ட இந்திய வரைபடங்களுடன் ஒத்துப்போகாத இந்திய வரைபடத்தை வெளியிடும் நபருக்கு அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். அல்லது, அதிகபட்சமாக இரண்டுமே சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

முதல் 4 கட்ட தேர்தலில் 66.95% வாக்குகள் பதிவு: மக்களவைத் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு கட்ட தேர்தல்களில் 66.95 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும், மொத்தமுள்ள 95 கோடி வாக்காளர்களில் இதுவரை சுமார் 45.10 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேஜ்ரிவாலின் பிரச்சாரம் குறித்து அமலாக்கத் துறை புகார்: தேர்தலில் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்தால், தான் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருத்ததை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புகார் அளித்துள்ளது. "இடைக்கால ஜாமீனில் வெளியாகியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க முடியும்?. இது நீதிமன்றத்தை எதிர்ப்பது போன்ற செயல்" என்று அமலாக்கத் துறை தனது வாதத்தில் கடுமையாக சாட்டியுள்ளது.

குடிநீர் தொட்டிகளுக்கு பூட்டுப் போட்டு பாதுகாக்க உத்தரவு: சமீக காலமாக குடிநீர் தொட்டிகளில் மலத்தைக் கலப்பது, மாட்டுச் சாணம் கலப்பது, அழுகிய முட்டைகளை வீசுவது போன்ற சம்பவங்கள் தொடர் நிகழ்வாகின்றன. இதைத் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர் தொட்டி களுக்கும் பூட்டுப் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கும்படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x