Published : 16 May 2024 07:51 PM
Last Updated : 16 May 2024 07:51 PM

தமிழகம் முழுவதும் குடிநீர் தொட்டிகளுக்கு பூட்டுப் போட்டு பாதுகாக்க உத்தரவு

காஞ்சிபுரம் அருகே புஞ்சையரன்தாங்கல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி (கோப்பு படம்).

சென்னை: சமீக காலமாக குடிநீர் தொட்டிகளில் மலத்தைக் கலப்பது, மாட்டுச் சாணம் கலப்பது, அழுகிய முட்டைகளை வீசுவது போன்ற சம்பவங்கள் தொடர் நிகழ்வாகின்றன. இதைத் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர் தொட்டி களுக்கும் பூட்டுப் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கும்படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் சில மாதங்களுக்கு முன்பு மலம் கலக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோல் இதே மாவட்டம் சங்கம் விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள திருவாந்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் அழுகிய முட்டைகள் வீசப்பட்டன. இதுபோல் குடிநீர் தொட்டியில் அசுத்தங்களை கலக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளை உரிய பாதுகாப்பான முறையில் பராமரிக்க ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலர் பி.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட் ஆட்சியருக்கும் அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், ‘பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் தொட்டிகளில் மூடி போட்டு பூட்டு போட வேண்டும். புதிதாக அமைக்கப்படும் குடிநீர் தொட்டிகளைச் சுற்றி மதில் சுவர் மற்றும் கதவுகள், பூட்டுகள் போடுவதற்கும் சேர்த்து மதிப்பீடு தயாரிக்க வேண்டும். இந்த பாதுகாப்பு பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்த வேண்டும். இதற்காக பஞ்சாயத்து பொது நிதியை பயன்படுத்தலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x