Published : 16 May 2024 07:00 PM
Last Updated : 16 May 2024 07:00 PM
நாமக்கல்: திருச்செங்கோட்டில் உள்ள பிரபல தனியார் மகளிர் கல்வி நிறுவனத்தில் சேலம் கோவை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அது, நாமக்கல் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையம்பாளையம் பகுதியில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. (திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனம் ) இந்தக் கல்வி நிறுவனத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, நர்சிங் கல்லூரி என18-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை உள்ளடக்கிய மகளிர் கல்லூரி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. கல்வி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கல்வி நிறுவனத்தில் இன்று (மே 16) காலை முதல் சேலம், கோவை மண்டலத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அட்மிஷன் ஆபீஸ், மருத்துவக் கல்லூரி அட்மிஷன் ஆபீஸ் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். இதுபோல் திருச்செங்கோடு அருகே சிறு மொளசியில் உள்ள கல்லூரி தாளாளர் கருணாநிதி இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கல்லூரியின் தாளாளர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தம்பிதுரையின் நெருங்கிய உறவினர் ஆவார். மேலும், நாமக்கல் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் இந்தக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி நாமக்கல் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT