Published : 03 Aug 2014 12:31 PM
Last Updated : 03 Aug 2014 12:31 PM

உலக வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் மோடி துணிச்சல் முடிவு: ராமதாஸ் பாராட்டு

உலக வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில், ஏழைகள் நலன் காத்திட துணிச்சலான முடிவு மேற்கொண்டதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "உலக வர்த்தக நிறுவனம் சார்பில் வர்த்தக நடைமுறைகள் மேம்பாட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பது குறித்த பேச்சுக்கள் ஜெனிவாவில் நடந்து வந்தன. உழவர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதை இந்தியா அதன் உறுதியான நிலைப்பாட்டால் தடுத்து நிறுத்தியிருக்கிறது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத் தகுந்தது மட்டுமின்றி, பாராட்டத்தக்கதும் ஆகும்.

உலக அளவில் வர்த்தத்தைப் பெருக்குவதற்காக உலக வர்த்தக நிறுவனம் அமைப்பு (WTO) 1995ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு வர்த்தகத்தைப் பெருக்கியதோ, இல்லையோ உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் வரிசையில் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளில் உள்ள வளங்களை கொள்ளையடித்து, பணக்கார நாடுகளுக்கு கொண்டு சென்று சேர்க்கும் பணியை சிறப்பாக செய்தது.

அதன் தொடர்ச்சியாக வர்த்தக நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றை தயாரிப்பதென கடந்த டிசம்பர் மாதம் பாலித் தீவில் நடந்த உலக வர்த்தக நிறுவன மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை 31ஆம் தேதிக்குள் இந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்க வேண்டும்.

பணக்கார நாடுகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதும், அவற்றின் வர்த்தகத்தைப் பெருக்குவதும்தான் உலக வர்த்தக நிறுவனத்தின் நோக்கம் என்பதால், வர்த்தக மேம்பாட்டு ஒப்பந்தத்திலும் அதற்கேற்ற வகையில் பல பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அவற்றில் முதன்மையானது ஒவ்வொரு நாடும் உணவு மானியத்திற்காக செலவிடும் தொகை 1986-88 ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த வேளாண்மை உற்பத்தியின் மதிப்பில் 10 விழுக்காட்டிற்கும் மிகாமல் இருக்க வேண்டும்; 2017 ஆம் ஆண்டிற்குள் உணவு மானியம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் பிரிவாகும்.

பணக்கார நாடுகளைப் பொறுத்தவரை பல வழிகளில் மானியங்கள் வழங்கப்படுவதாலும், அங்குள்ள மக்களின் மனித வாழ்நிலைக் குறியீடு (Human Development Index - HDI) அதிகமாக இருப்பதாலும் அந்த நாடுகளில் உணவு மானியத்திற்கு பெரிய அளவில் தேவையில்லை. ஆனால், இந்தியாவில் 66 விழுக்காட்டிற்கும் கூடுதலான மக்களுக்கு உணவு மானியம் வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு வர்த்தக மேம்பாட்டு ஒப்பந்தத்தின் பிரிவுகள் தடையாக இருப்பதால், அதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பேச்சுக்களில் பங்கேற்ற இந்திய வர்த்தக அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் பணக்கார நாடுகள் தீவிரமாக இருந்ததால் 33 வளரும் நாடுகளைக் கொண்ட குழுவுக்கு தலைமை வகிக்கும் இந்தியா அதன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதை தடுத்துவிட்டது.

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த முடியாது. இப்போது நடைமுறையிலுள்ள பொது வினியோகத் திட்டத்தையும், அதற்காக உழவர்களிடம் இருந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் முறையையும் ரத்து செய்ய வேண்டியிருக்கும். இதன்மூலம் உணவுத் தேவைக்காக வெளிச்சந்தையை மட்டுமே இந்திய மக்கள் நம்பியிருக்கும் நிலையை உருவாக்குவதும், அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை தங்கள் வசமாக்கிக் கொள்வதும் தான் பணக்கார நாடுகளின் திட்டமாகும்.

இத்திட்டத்திற்கு முந்தைய அரசும் துணை போன நிலையில், நரேந்திர மோடி அரசு துணிச்சலுடன் செயல்பட்டு பணக்கார நாடுகளின் திட்டத்தை முறியடித்திருக்கிறது. ஏற்கெனவே கடன் தொல்லை, வறட்சி உள்ளிட்ட காரணங்களால் உழவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால் நிலைமை மேலும் மோசமாகும் வாய்ப்புள்ளது. இதை தடுத்து நிறுத்தியதன் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து வளரும் நாடுகளிலும் உள்ள ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இவ்விசயத்தில் அதிரடியாக செயல்பட்டு இந்தியா முதுகெலும்புள்ள நாடு என்பதை நிரூபித்த பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்.

வர்த்தக மேம்பாட்டு ஒப்பந்தத்திற்கு இந்தியா முட்டுக்கட்டை போட்டதால் உலக வணிக அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பணக்கார நாடுகள் இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளன. நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, வணிகத்துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர் ஆகியோர் இது தொடர்பாக நிர்பந்தம் கொடுத்துள்ளனர்.

ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட பிரதமர், இந்தியாவின் சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள் என திட்டவட்டமாக கூறிவிட்டார். ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க நரேந்திர மோடி விரைவில் அமெரிக்கா செல்லும்போது இது குறித்த அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். அவற்றையும் நிராகரித்து இந்திய நலனை பிரதமர் பாதுகாப்பார் என்று நம்புகிறேன். இலங்கை சிக்கல் உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளிலும் இதே துணிச்சலை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்த வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x