Published : 16 May 2024 09:57 AM
Last Updated : 16 May 2024 09:57 AM
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் ஆங்காங்கே மழை பெய்த நிலையில் வெப்பத்தால் வாடிய சென்னை மக்களை கோடை மழை குளிர்வித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலுக்கிடையில், மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும் கனமழை பெய்துவருகிறது.
இதற்கிடையில், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பரவலாக மழை: இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்றிரவும் கூட கோயம்பேடு, பல்லாவரம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், தரமணி, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், மடிப்பாக்கம், வேளச்சேரி, அடையாறு போன்ற பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. சென்னையில் உள்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில பகுதிகளில் மழை நின்றிருந்தாலும் கூட வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
கோடை வெப்பத்தால் வாடிவந்த சென்னை மக்களை திடீரென சூழ்ந்த கருமேகங்களும், மழையும் குளிர்வித்து நிம்மதி பெறச் செய்துள்ளது.
26 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: முன்னதாக நேற்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களை வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் 19-ம் தேதி வரை.. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 19-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20, 21 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 19-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பம் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு கேரள கடலோரப் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.” எனக் குறிப்பிட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT