Published : 16 May 2024 05:35 AM
Last Updated : 16 May 2024 05:35 AM

அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்: பயணிகள் அதிர்ச்சி; ஓட்டுநர் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு

கொள்ளிடம் அருகே முன் சக்கரம் கழன்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்து.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள வடரங்கத்திலிருந்து சீர்காழிக்கு நேற்று அரசுநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த எஸ்.அன்பழகன்(44) பேருந்தை ஓட்டினார்.

பனங்காட்டாங்குடி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் இடதுபுறம் முன்பக்க சக்கரம் கழன்று, பேருந்துக்கு முன்னே தனியாக சாலையில் ஓடியது. இதைக்கண்ட ஓட்டுநர்சாதுர்யமாக செயல்பட்டு, உடனடியாக சாலையோரம் பேருந்தைநிறுத்தினார். பின்னர், பயணிகள்இறக்கிவிடப்பட்டனர்.

இதனால் பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று ஓடியதைப் பார்த்த பயணிகளும், சாலையில் சென்ற பொதுமக்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பேருந்து இன்னும் சிறிது தொலைவு சென்றிருந்தால், அருகில் உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும். ஓட்டுநரின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீஸார், அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தரைதட்டிக் காணப்படும் பேருந்தின் முன்சக்கர அச்சு.

அண்மையில் திருச்சியில் நகரப் பேருந்தில் இருந்து இருக்கையுடன் சேர்ந்து நடத்துநரும் பேருந்துக்கு வெளியே விழுந்ததில், அவர் காயமடைந்தார். இதையடுத்து, அரசுப்பேருந்துகளின் பராமரிப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்தன.தொடர்ந்து, தமிழகம் முழுவதும்உள்ள அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பேருந்துகளின் தன்மை குறித்து முழுமையான ஆய்வு நடத்தவும், பேருந்துகளை முறையாகப் பராமரிக்குமாறும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார்.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இயக்கப்படும் 142 பேருந்துகள் அண்மையில் ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில், கொள்ளிடம் அருகே அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தபோதே, அதன் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடியது, பேருந்துப் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x