Published : 17 Apr 2018 09:52 AM
Last Updated : 17 Apr 2018 09:52 AM
ம
ருத்துவத்தோடு அதுகுறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் சேலத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ராஜா. தனது 60 வயதில் 57 நூல்களை எழுதியுள்ளார். அத்தனையும் மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொகுப்புகள்.
குழந்தைகள் மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஆஸ்துமா மற்றும் அலர்ஜி மருத்துவ நிபுணர். தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் சேலத்தில் தனி யாக மருத்துவமனையும் நடத்தி வருகிறார். ஓய்வில்லா பணிகளுக்கு இடையே மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு நூல்களை எழுதித்தள்ளுகிறார் இந்த மருத்துவ எழுத்தாளர்.
மருத்துவம் சார்ந்த நூல்கள் அதிகளவில் வெளிவராத 1980-களில் இவர் எழுதிய நூல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.
முதன்முதலில் ‘இருதயம் ஒரு புதிர்’ என்ற நூலை எழுதினார். பின்னர் அடுத்தடுத்து எழுதத் தொடங்கினார். ஊசி மூலம் மட்டுமல்ல, பேனா மூலமும் நோயை விரட்டும் வித்தையை செய்து காண்பித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “எழுத்தாளராக வேண்டும் என்ற நோக்கம் எல்லாம் எனக்கு இல்லை. மருத்துவம் குறித்து மக்களுக்கு அறியாமை உள்ளது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே எழுத காரணமாக இருந்தது. அதன் பின்னர் குழந்தை வளர்ப்பு - ஒரு டாக்டரின் கடிதங்கள், சர்க்கரை நோயால் சங்கடமா, ரத்தக் கொதிப் பால் இம்சையா, ஆஸ்துமா நோயால் அவதியா, காசநோயால் கவலையா, பருவம் ஒரு பாரமா, நஞ்சாகும் மருந்துகள் என பல்வேறு நூல்களை அடுத்தடுத்து எழுதினேன்.
40 ஆண்டு மருத்துவ சேவையில் மக்களுக்கு கூற விரும்புவது, குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் எதற்கெடுத்தாலும் பதற்றம் அடைகின்றனர். அது கூடாது. குறிப்பாக, சளி, காய்ச்சல் போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், அவை குணமாவதற்கு சில நாட்களாகும். அதுவரை பொறுமை காக்க வேண்டும். தடுப் பூசி போடுவதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. ஆனால், தடுப்பூசிகள் மிகவும் அவசியமானது.
ஆன்டிபயாடிக் மருந்துகளை அவசியப்பட்டால் தவிர, இதனை பயன்படுத்தக் கூடாது. சிகிச்சைக்கு வருபவர்களை தேவையின்றி உள்நோயாளிகளாக்கி சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவம் கார்ப்பரேட் வணிகமாக மாறிவருகிறது. இளம் மருத்துவர்கள் இந்த வணிகத்தில் சிக்கிவிடாமல் மருத்துவ பணியை ஆத்மார்த்தமாக மக்கள் சேவையாக மேற்கொள்ள வேண்டும்” என ஆத்மார்த்தமாக கூறுகிறார் ராஜா.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சிறந்த மருத்துவருக் கான விருதையும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் ராஜாவுக்கு வழங்கியுள்ளது.
இவரது 7 நூல்கள் ‘அறிவொளி’ இயக்கத்துக்காக தமிழக அரசால் வாங்கப்பட்டுள்ளன. சிகிச்சை மூல மாக மட்டுமல்ல சிந்திக்க வைப்பதன் மூலமாகவும் நோயை குணமாக்க வழியுண்டு என்கிறார் இந்த சேலம் ராஜா எம்பிபிஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT