Published : 16 May 2024 05:45 AM
Last Updated : 16 May 2024 05:45 AM
சென்னை: தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேசிய டெங்கு ஒழிப்பு தினம் மே 16-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாக உருவாகும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு, பருவ மழைக் காலத்துக்கு பின்னர் கோடைகாலத்திலும் அதிகரித்து வருகிறது.
பருவநிலை மாற்றம், நகரமயமாக்கல், திட்டமிடப்படாத திடக் கழிவு மேலாண்மை, நகர்ப்புற கட்டுமானப் பணிகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அனைத்து பருவங்களிலும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
கடந்த சில நாட்களாக திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், மதுரை, அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக விரிவுபடுத்த வேண்டும்.
அதனால், காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். டெங்கு உறுதி செய்யப்பட்டால், அது தொடர்பான தகவல்களை சுகாதாரத் துறை இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து டெங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதேபோல், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், மருத்துவக் கருவிகள் போதிய அளவில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ரத்த வங்கிகளில் போதிய எண்ணிக்கையில் ரத்த அலகுகள் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விரைவு மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நேரடி கள ஆய்வு நடத்தி, டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT