Published : 16 May 2024 06:12 AM
Last Updated : 16 May 2024 06:12 AM
மதுராந்தகம்: மதுராந்தகம், வாயலூர் பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியம், வாயலூர் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு உறவினரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களின் கார் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, வாயலூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில், காரில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ராஜேஷ், மாதேஷ், யுவராஜ், ஏழுமலை ஆகியோர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த விக்னேஸ்வரன் என்பவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த விபத்து காரணமாக ஈசிஆர் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக சதுரங்கபட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பட்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர், சென்னை விமான நிலையத்தில் இருந்து, பண்ருட்டி நோக்கி நேற்றுஅதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் கிராமப் பகுதி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஜெய்பினிஷா (40), அவரது மகன்கள் மிஷால் (20), பைசல் (12) மற்றும் ஓட்டுநர் சரவணன் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக, மதுராந்தகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த மதுராந்தகம் போக்குவரத்து போலீஸார் வாகன போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு வாகன போக்குவரத்து சீரானது.
உரிய நிவாரணம் வழங்கப்படும்: இந்த விபத்துகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல், ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT