Published : 16 May 2024 05:33 AM
Last Updated : 16 May 2024 05:33 AM
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய குறிப்புகள் பள்ளிக்கல்வி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் 'செம்மொழியான தமிழ் மொழி' எனும் தலைப்பில் தமிழ் மொழிக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்பு குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
அதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டிலும் (2024-25) 10-ம் வகுப்பு தமிழ் பாடநூலில் உரைநடைப் பகுதியில் ‘பன்முகக்கலைஞர்' என்ற தலைப்பில் கருணாநிதியின் சிறப்பு திறன்கள் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதேபோல், தற்போது 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலும் கருணாநிதி பற்றிய குறிப்புகள் பாடத்தில் இடம்பெற்றுள்ளன. அதாவது, சமூக அறிவியல் குடிமையியல் பிரிவில், 'பெண் உரிமை சார்ந்த சட்டங்கள்' என்ற தலைப்பின்கீழ் வரும் பாடத்தில் கருணாநிதி பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் ‘கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவதற்காக 1956 இந்து வாரிசு உரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட முன்வரைவு 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் தமிழகத்தில் இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சமஉரிமை கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT