Published : 16 May 2024 05:27 AM
Last Updated : 16 May 2024 05:27 AM
சென்னை: சொல்லாத புதிய திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியதால் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ என்று முழங்கி தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களுக்கு வீடுகள் வழங்கும் ‘கனவு இல்லம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம், கரோனா கால கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் நோக்கில் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம், ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம்’, ‘நான் முதல்வன்’ திட்டம், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளன.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழக பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி’ திட்டம், ‘‘புதுமைப் பெண்’ திட்டம், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த சமூக அமைப்புகள், பெரும்தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்ட ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பள்ளிக் கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கணினி அறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’, தமிழ் மரபின் வளமை, பண்பாட்டின் செழுமை, சமூக சமத்துவம், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல ‘மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுதவிர, ‘முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்’, ஆதிதிராவிட இளைஞர்கள், மகளிரை தொழில் முதலாளியாக உயர்த்தும் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’, ‘நீங்கள் நலமா?’ திட்டம், ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படுகின்றன.
இவ்வாறாக தமிழக முதல்வர், ‘சொல்லியதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்வோம்’ என்று கூறி நடைமுறைப்படுத்திய பல்வேறு சிறப்பான திட்டங்களால் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT