Published : 15 May 2024 08:02 PM
Last Updated : 15 May 2024 08:02 PM
சென்னை: கோயில் தேர் திருவிழாக்களின் போது அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள காளியம்மன் கோயிலில், கடந்த 2022-ம் ஆண்டு தேர் திருவிழா நடத்தப்பட்டது. மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த திருவிழாவின் போது, தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் பலியானார்.
கோயில் தேர் திருவிழாக்களின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பின்பற்றாததால் தான் விபத்து நடந்துள்ளது. எனவே, விதிமுறைகளை பின்பற்றத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தேர் திருவிழாக்களின் போது, இந்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோயில் தேர் திருவிழாக்களில் பின்பற்றுவதற்காக அரசு வகுத்த விதிகளை அனைத்து அதிகாரிகளும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT