Published : 15 May 2024 07:59 PM
Last Updated : 15 May 2024 07:59 PM

பெண் காவலர்கள் குறித்த நேர்காணல்: பகிரங்க மன்னிப்பு கோரிய ‘ரெட் பிக்ஸ்’ யூடியூப் சேனல்

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு

சென்னை: “தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது” என்று ரெட் பிக்ஸ் ஊடகத்தின் பொது மேலாளரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவியுமான ஜேன் ஃபெலிக்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 30.04.2024 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் ரெட் பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல.

பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக ரெட் பிக்ஸ் ஊடகம் கருதுகிறது. சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அந்தக் காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல் துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் ‘பிரைவட்’ (Private) செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்: சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

சோதனையில் நடந்தது என்ன? - முன்னதாக, சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு யூடியூப் சேனல் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர்கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது சென்னை போலீஸாரும் அடுத்தடுத்து 7 வழக்குகளைப் பதிந்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், தேனி போலீஸார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பதிந்தனர். இந்தவழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயலில் உள்ள அவரது வீடு, தி.நகரில் உள்ள அவரதுஅலுவலகத்திலும் சோதனைநடைபெற்றது. இதற்கிடையே, சவுக்கு சங்கர் கைதைத் தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் திருச்சி போலீஸாரால் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய நிலையில் அது தொடர்பான ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்பட மேலும் சிலவற்றை ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் தேடும் பணி நடைபெற்றதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x