Published : 15 May 2024 06:17 PM
Last Updated : 15 May 2024 06:17 PM

சவுக்கு சங்கர் விவகாரத்தில் மனித உரிமைகளை காவல் துறை மீறக் கூடாது: செல்வப்பெருந்தகை

தருமபுரி: சவுக்கு சங்கர் விவகாரத்தில் தமிழக காவல்துறை கண்ணியத்துடனும், மனித உரிமைகளை மீறாமலும் நடந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று (மே 15) நடந்தது. தருமபுரி பேருந்து நிலையம் அருகில் தனியார் அரங்கில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறியது: “தமிழகத்தில் உள்ள கிராமங்கள், வீதிகள், இல்லங்கள் வரை காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பையும், ராகுல்காந்தி தரும் செய்தியையும் கட்சியினர் கொண்டு சேர்க்க வேண்டும்.

300-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் பாஜக 100 தொகுதிகளைக் கூட வெல்லாது என தெரிந்து கொண்டதால், மோடி தற்போது இஸ்லாமியர்களை புகழத் தொடங்கியுள்ளார். அதாவது மோடி சரணடைந்திருக்கிறார். மன்றாடி மன்னிப்பு கோரி வருகிறார். இதைத் தான் ராகுல் காந்தி வெறுப்பு அரசியல் என்று கூறுகிறார். ஆர்எஸ்எஸ் மனித நேயத்துக்கு எதிரானது என்றும், அது அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார்.

எருமை மாடு அரசியல், பாகிஸ்தான் அரசியல், பிரிவினைவாத அரசியல், மலைவாழ் மக்கள் அரசியல் என ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் ஒவ்வொரு வித அரசியல் பேசிய பிரதமர் மோடி தற்போது, 'இஸ்லாமியர்களை நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை' என்று கூறுகிறார். மோடி மற்றும் பாஜகவின் உண்மை முகம் தற்போது தெரியவந்துள்ளது. வாக்குகளுக்காக அவர் குட்டிக்கரணம் அடிக்கிறார். தேசத்துக்கான தேர்தலாக அல்லாமல் மதத்துக்கான தேர்தலாக அவர்கள் இந்த தேர்தலை பார்த்தார்கள். நிலைமையை தெரிந்துகொண்டு 4-ம் கட்ட தேர்தலின்போது மன்னிப்பு கேட்கும் விதமாக பேசி வருகின்றனர்.

சமூக நீதியை சூறையாடும், அழிக்கும் கட்சியான பாஜக-வுடன் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஏன் கூட்டணி வைத்தார்? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். 10.5 சதவீத இட ஒதுக்கீடு என அதிமுகவினர் வன்னியர் சமூக்கத்தை ஏமாற்றினர். பாமக தூக்கிப் பிடிக்க வேண்டிய இயக்கம் காங்கிரஸ், தூக்கிப்பிடிக்க வேண்டிய தலைவர் ராகுல் காந்தி. சாதிவாரி கணக்கெடுப்பை புறம்தள்ளிய கட்சியான பாஜகவுடன் கைகோர்த்திருப்பது நியாயமா? இமாலய தவறு செய்துள்ள மருத்துவர் ராமதாஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மோடியின் தோல்வி தற்போது உறுதியாகியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய அவர்களின் சித்தாந்தம் மாறி இன்று உண்மைக்கு புறம்பாக பேசி வருகின்றனர். இதை இசுலாமியர்கள் யாரும் நம்பக் கூடாது.

எழுத்து, பேச்சு, கருத்து உரிமைகள் அனைவருக்கும் உள்ளது என்றாலும் யாரும் வரம்பை மீறக் கூடாது. அது சவுக்கு சங்கருக்கும் பொருந்தும். அவர் விவகாரத்தில், அவர் செய்த தவறுகளுக்காக சட்டப்படியான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அவர்மீது உண்மைக்கு புறம்பான வழக்குப் பதிவு செய்யக் கூடாது. மனித உரிமைகளை மீறாமல் காவல் துறை கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில், தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, மாநில துணைத் தலைவர் சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாநில அமைப்பு பொறுப்பாளர் ராம்மோகன், மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x