Published : 15 May 2024 11:40 AM
Last Updated : 15 May 2024 11:40 AM
மதுரை: மதுரையில் செயற்கையாக பழுக்க வைத்த மற்றும் அழுகிய 300 கிலோ பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்ப தாக்கத்தில் இருந்து, மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பழங்களை உட்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப் படுவதாகவும், அழுகிய பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 2 குழுக்களாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த பழங்கள் அங்காடியிலும், சிம்மக்கல்லில் உள்ள பழங்கள் அங்காடிகளும் அதிரடி ஆய்வு நடத்தினார்கள். ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைத்தது மற்றும் அழுகிய பழங்களை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 300 கிலோ பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், மாம்பழம், தண்ணீர் பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்ததாலும் மற்றும் அழுகிய பழங்களை விற்பனை செய்ததாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 7 பழக் கடைகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதமும், நோட்டீஸ் வழங்கியும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT