Published : 15 May 2024 05:24 AM
Last Updated : 15 May 2024 05:24 AM

3 அரசு மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்: சுகாதார துறை அமைச்சர் தகவல்

சென்னை: ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்க நாடுகளுக்கும் செல்பவர்கள், மூன்று அரசு மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் குடிநீர் மற்றும்நீர் மோர் பந்தலை கட்சியின் மாவட்ட செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆப்பிரிக்க நாடுகளுக்கும்,தென்அமெரிக்காவின் ஒரு சில நாடுகளுக்கும் செல்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சலை தடுப்பதற்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும் என்பது விதியாகும். இந்த ஊசி போட்டுச்சென்றால் மட்டுமே விமான நிலையங்களில், அந்த நாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி கிடைக்கும்.

அதேபோல் அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும்போதும் அந்த தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் இந்ததடுப்பூசி போடப்பட்டு வந்தது.பின்னர், தமிழகத்தில் தனியார்மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விமான நிலையநிர்வாகம் அனுமதிப்பதில்லை.

அதனால், கிண்டி கிங்இன்ஸ்ட்டியூட் வளாகம், சென்னைதுறைமுகத்தில் உள்ள மருத்துவமையம், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மருத்துவ மையம் என தடுப்பூசி போடப்படும் இடங்கள்மூன்றாக பிரிக்கப்பட்டு முழுநேரமும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று அரசு மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்.

மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. பயனாளர்களின் பட்டியலை உறுதிப்படுத்துவதற்கு காலதாமதம் ஆகிறது. தேர்தல் நடத்தைவிதிமுறைகள் அமலில் இருப்பதால், ஜூன் 6-ம் தேதிக்கு பின்னர், மத்திய அரசின் அதிகாரிகளோடு பேசி விரைந்து உதவித் தொகை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த காலங்களைபோல இல்லாமல், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் இப்போது முழு அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். வீட்டிலேயே சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும்.

இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத 51,919 மாணவ, மாணவிகளுக்கு மனநலஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மன வருத்தத்தில் உள்ள 137 மாணவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் நேரில் சென்றும், தொலைபேசி மூலமாகவும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x