Published : 14 May 2024 04:12 PM
Last Updated : 14 May 2024 04:12 PM
சென்னை: பொய் தகவல்களுடன் வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரண்ணன் என்பவர், தனது தந்தையின் மரணத்துக்குப் பின், வாரிசுரிமை சான்று வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், மாரண்ணனின் தந்தை மாரண்ண கவுடருக்கு இரு மகள்கள், இரு மகன்கள் உள்ள நிலையில், தான் மட்டுமே வாரிசு எனக்கூறி மாரண்ணன் விண்ணபித்துள்ளதாகக் கூறி, அவரது மனுவை நிராகரித்து தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மாரண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “பொய் தகவல்களைக் கூறி, உண்மையை மறைத்து, வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம்” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று பெற்று, சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது.
உண்மை தகவல்களை மறைத்து வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிக்கப்படுவது தொடர்பான வழக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ஐந்து வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்கவேண்டும்’ என தமிழக வருவாய் நிர்வாகத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
மேலும், இதுபோன்ற குற்ற வழக்கு தொடராமல் உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை, குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT