Published : 14 May 2024 12:22 PM
Last Updated : 14 May 2024 12:22 PM
திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகப்பட்டினம் தொகுதி மறைந்த எம்பி எம்.செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் இன்று (செவ்வாய் கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் தொகுதி எம்பியுமான எம். செல்வராஜின் உடல் திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியில் உள்ள அவரது இல்லத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது. எம்.செல்வராஜ் எம்பி, உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த நான்காம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழகம் முழுவதும் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், நாகை திருவாரூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர்,பொதுநல அமைப்பினர் நீண்ட வரிசையில் காத்திருந்து இன்று காலை வரை அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை அவரது இல்லத்தின் முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணன், மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திமுக பொருளாளர் டிஆர்.பாலு எம்பி மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் எம். செல்வராஜிக்கு அஞ்சலி செலுத்தி பேசினார்கள்.
தொடர்ந்து, அவரது இல்லத்தின் அருகே உடல் அடக்கம் நடைபெற்றது. முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெற்றது. இந்த அரசு மரியாதை வழங்கும் நிகழ்வு திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார், மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT