Last Updated : 28 Apr, 2018 07:32 AM

 

Published : 28 Apr 2018 07:32 AM
Last Updated : 28 Apr 2018 07:32 AM

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு வெகுவிமர்சையாக திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நேற்று நடந்தது.

மதுரை சித்திரை திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய வைபவமான மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

. காலை 6 மணி முதலே திருக்கல்யாணத்தை காண வடக்கு ஆடி வீதி, சித்திரை வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருக்கல்யாணத்தை இலவசமாக காண பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகம் வழங்கிய ரூ.500 , ரூ.200 பாஸ் வைத்திருந்தவர்கள், அதிகாரிகள், முக்கிய நபர்கள் அனைவரும் மேற்கு கோபுர வாயில் வழியாக வடக்கு ஆடி வீதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9 மணி அளவில் முருகன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன், பெருமாள் ஆகியோர் தனித்தனியே திருக்கல்யாண மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். 9.05 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமண சடங்குகள் ஆரம்பமாயின.

வேதமந்திரங்கள் முழங்க காப்புக் கட்டுதல், தாரை வார்த்தல், ஆடைகள் மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் மேடையில் நடந்தன. அதைத் தொடர்ந்து 9.21மணிக்கு சொக்கநாதரிடம் ஆசி பெற்ற மங்கள நாண் (தாலி) மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கப் பட்டது.

அப்போது பக்தர்கள் குறிப்பாக பெண்கள் தாலியை கண்களில் தொட்டு தாலி பாக்கியம் நிலைக்க வேண்டினர். ஏராளமான பெண்கள் புதிய தாலி அணிந்து கொண்டனர். 9.43 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து 10.10 மணிக்கு சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் பழைய திருக்கல்யாண மண்டபத்துக்கு புறப்பட்டனர். நேற்று மாலைவரை பல ஆயிரம் பக்தர்கள் தரிசித்தனர். திருமண வைபவத்தை ஆயிரக்கணக்கானோர் நேரடியாக கண்டு தரிசித்தனர். கோயிலுக்கு வெளியே பெரிய எல்இடி டிவி மூலமும் திருக்கல்யாணத்தை பார்த்தனர்.

இன்று தேரோட்டம்

திருக் கல்யாணத்தை தொடர்ந்து நேற்றிரவு ஆனந்தராயர் பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன் உலா வந்தார்.

இன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. மாசி வீதிகளை சுற்றி வந்து காலை 11 மணியளவில் தேர் நிலையை அடையும். இன்றிரவு சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமி, அம்மன் இணைந்து உலா வருவது மிக சிறப்பானதாகக் கருதப்படுகிறது. நாளை தேவேந்திர பூஜையுடன் மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

கள்ளழகர் இன்று புறப்பாடு

சித்திரை திருவிழாவின் முக்கிய வைபவமான வைகை ஆற்றில் கள்ளழகர் நாளை மறுநாள் இறங்குகிறார். இதற்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் இன்று மாலை மதுரைக்கு புறப்படுகிறார். நாளை காலை மதுரை மூன்றுமாவடி அருகே எதிர்சேவை நடைபெறும்.

விடிய, விடிய பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் நாளை மறுநாள் காலை 6 மணியளவில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். பல லட்சம் பக்தர்கள் திரளும் இவ்விழாவுக்காக 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x