Last Updated : 23 Apr, 2018 08:24 AM

 

Published : 23 Apr 2018 08:24 AM
Last Updated : 23 Apr 2018 08:24 AM

பேராசிரியை நிர்மலாதேவி நடவடிக்கை பிடிக்காமல் விவாகரத்து கோரி 2-வது முறை வழக்கு தொடர்ந்த கணவர்

பேராசிரியை நிர்மலாதேவியின் நடவடிக்கைகள் பிடிக்காமலும், அவரால் ஏற்பட்ட மன அழுத்தத்தாலும் விவாகரத்துக் கோரி 2-வது முறையாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார் அவரது கணவர் சரவணபாண்டியன்.

அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டியதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இவரது கணவர் சரவணபாண்டியன். இவர் பொறியியல் பட்டதாரி. இவரது சகோதரரும், சகோதரியும் மருத்துவர்கள். சரவணபாண்டியன் ரயில்வே பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். கணவன், மனைவி இடையே சுமுகமாக உறவு இல்லை எனக் கூறப்படுகிறது.

கருத்து வேறுபாட்டால் பிளவு

இதுகுறித்து சரவணபாண்டியனின் உறவினர்கள் கூறியதாவது: நிர்மலாதேவியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால், வேதனை அடைந்த சரவணபாண்டியன் அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். பின்னர் பேராசிரியை நிர்மலாதேவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சரவணபாண்டியன் மீண்டும் ஊருக்கு திரும்பினார். அதைத் தொடர்ந்து, கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து சண்டையும், சச்சரவுகளும் ஏற்பட்டு வந்துள்ளன.

மகள்களை கூட்டிக் கொண்டு எங்காவது தலைமறைவாகி விடுவேன் என்றும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் நிர்மலாதேவி பலமுறை கணவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சரவணபாண்டியன் அமைதியாக பொறுத்துப் போனார். தனது 2-வது மகள் பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவரை வெளிநாடு அழைத்துச் செல்லவும் சரவணபாண்டியன் திட்டமிட்டிருந்தார்.

மன அழுத்தம்

அதோடு, பேராசிரியை நிர்மலாதேவி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சென்னையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டாக கணவர் சரவணபாண்டியனை அதிகமாக துன்புறுத்த தொடங்கினார். கணவருடன் கோபித்துக் கொண்டு, கடந்த ஆண்டு ஒரு மாதம் பேராசிரியை நிர்மலாதேவி வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மும்பை ஆசிரமத்தில் தஞ்சம்

இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் அப்போது சரவணபாண்டியன் புகார் அளித்திருந்தார். ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் மும்பையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் அவரே விமானம் மூலம் ஊர் திரும்பி வந்தார். அதற்கு முன் ஒருமுறையும் இதே போன்று நிர்மலாதேவி திடீரென தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, பேராசிரியை நிர்மலாதேவியின் தொந்தரவு அதிகமானதால் சரவணபாண்டியன் விவாகரத்துக் கோரி அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு தான் தற்கொலை செய்துகொள்வதாக நிர்மலாதேவி பலமுறை மிரட்டல் விடுத்ததால் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார்.

மீண்டும் விவாகரத்து வழக்கு

தொடர்ந்து, நிர்மலாதேவியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் சில மாதங்களாக மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அதோடு, நிர்மலாதேவியிடம் சேர்ந்து வாழப் பிடிக்காமல் 2-வது முறையாக கடந்த மாதம் முதல் வாரத்தில் அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் சரவணபாண்டியன் மீண்டும் விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இவ்வாறு உறவினர்கள் தெரிவித்தனர்.

கருத்து கூற மறுப்பு

இதுகுறித்து சரவணபாண்டியனின் வழக்கறிஞர் ராம்குமார் கூறியதாவது: நிர்மலாதேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளிவருவதற்கு முன்னரே, விவாகரத்து கோரி சரவணபாண்டியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது மிகுந்த மன உளைச்சலில் சரவணபாண்டியன் உள்ளார். இம்முறை எப்படியும் விவாகரத்து பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் சரவணபாண்டியன் உள்ளார். இவ்வாறு வழக்கறிஞர் ராம்குமார் கூறினார்.

இந்நிலையில், விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சரவணபாண்டியனிடமும், அவரது தந்தை பாண்டியனிடமும் சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து வெளியே வந்த சரவணபாண்டியன் எதுவும் கூற மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x