Published : 13 May 2024 06:08 AM
Last Updated : 13 May 2024 06:08 AM
சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில், சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு தாமதமின்றி வீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த குடியிருப்புகளில் ஒரு பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை, கழிவறை வசதிகளும், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வசதி, மின்தூக்கி, சாலைகள், தெரு விளக்குகள், கான்கிரீட் நடைபாதை, மழைநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
சமூக வசதிகளான பள்ளி, நூலகம், பூங்கா, அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், சிறு கடை, பால் விற்பனை நிலையம், சமுதாய கூடம் போன்ற வசதிகளை இந்த குடியிருப்புகளின் அருகில் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 92 திட்டப் பகுதிகளில் ரூ.3,197.94 கோடி மதிப்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 37,720 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3,023 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை பத்திரங்கள், 1,733 மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கும் விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 1.68 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 89,429 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் பல்வேறு நிலையில் முன்னேற்றத்தில் உள்ளன. மேலும், மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.2,078.37 கோடி திட்ட மதிப்பீட்டில் 69,701 புதிய தனி வீடுகள் கட்ட அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக 17 திட்டப் பகுதிகளில் உள்ள 7,582 சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு, மீண்டும் அதே இடத்தில் ரூ.1,608.88 கோடியில் 9,522 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கெனவே கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் ஆயுட்காலத்தை அதிகரிக்க ரூ.59.80 கோடியில் பழுது நீக்குதல், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ள 117 திட்டப் பகுதிகளில் 76,434 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 79 திட்டப் பகுதிகளில் உள்ள 31,239 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டமைப்பு வசதிகளை ரூ.82.57 கோடியில் மேம்படுத்த இறுதி செய்யப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், நகர்ப்புற மக்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு இனங்களில் 4,771 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT