Published : 13 May 2024 06:30 AM
Last Updated : 13 May 2024 06:30 AM
சென்னை: தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழிவதைத் தடுக்க புதியதாக கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கான பணிகளை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக 109 மற்றும் 112-வது வார்டுகளில் ரூ.24 கோடியில் பணிகள் நடைபெறுகிறது.
சென்னைக்கு வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் வீடுகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. முன்பு தனி வீடுகளாக இருந்தவை இப்போது பன்னடுக்கு குடியிருப்புகளாக மாறிவிட்டன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீரின் அளவும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
இதனால் பல பகுதிகளில் கழிவுநீர் குழாய்களின் கொள்ளளவை தாண்டி வீடுகள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழிகிறது. இதனால் ஏற்படும் சுகாதாரக் கேட்டால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதுகுறித்து அவ்வப்போது வரும் புகார்களின் அடிப்படையில் சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சிறிய மற்றும் பெரிய கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்களைக் கொண்டு கழிவுநீரை வெளியேற்றி வருகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வாரவும் செய்கிறார்கள். இருப்பினும் இந்தப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. எனவே, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண திட்டமிடப்பட்டது.
அதன்படி, பழைய கழிவுநீர் குழாய்களுக்குப் பதிலாக அதற்கு இணையாக தெருக்களின் மையப் பகுதியில் புதிதாக மெகா கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக அடிக்கடி கழிவுநீர் நிரம்பி வழியும் தெருக்களில் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழியும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிதாக பெரிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்கான நிதியை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை வழங்கியுள்ளது. முதல்கட்டமாக 109-வது வார்டில் உள்ள 21 தெருக்களில் ரூ.16 கோடியிலும் 112-வது வார்டில் உள்ள 15 தெருக்களில் ரூ.8 கோடியிலும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே உள்ள கழிவுநீர் குழாய்களுக்கு அருகில் புதிதாக பெரிய அளவிலான கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. பழைய கழிவுநீர் குழாய் 150 மில்லி மீட்டர் விட்டமாக உள்ளது. புதிய கழிவுநீர் குழாய் 250 மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும்.
கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு முன்பாக இயந்திர நுழைவுவாயில் (Machine Hole) கான்கிரீட் கலவை இயந்திரம் மூலம் உடனுக்குடன் உருவாக்கப்படுகிறது. தூர் வாருவதற்கு வசதியாக மனித நுழைவுவாயிலுக்குப் பதிலாக இயந்திர நுழைவுவாயில்களை அமைக்கிறோம்.
இப்பணிகள் முடிவடைந்ததும் கழிவுநீர் எளிதாக வழிந்தோடும் வகையில் (நீரோட்டத்துக்கு ஏற்ப) புதிதாக பெரிய கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்ததும் தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழியும் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT