Published : 12 May 2024 08:02 AM
Last Updated : 12 May 2024 08:02 AM
திருச்சி: மேட்டூரில் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கர்நாடகாவிலிருந்தும் தண்ணீர் கிடைக்காத சூழல் இருப்பதாலும் நிகழாண்டில் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் 12-ம்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இதன் மூலம் இந்த மாவட்டங்களில் ஏறத்தாழ 4 லட்சம் ஏக்கரில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு இருந்ததால், ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு அணை திறக்கப்பட்டது.
ஆனால், நிகழாண்டில் மேட்டூர் அணையில் நேற்றைய நிலவரப்படி 51 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. காவிரியில் தண்ணீர் வழங்கும் கர்நாடக அணைகளைப் பொறுத்தவரை, மே 9-ம் தேதி நிலவரப்படி ஹேரங்கி அணையில் (அடைப்புக்குறிக்குள் மொத்த கொள்ளளவு) 2.97 டிஎம்சியும் (8.50 டிஎம்சி), ஹேமாவதியில் அணையில் 9.22 டிஎம்சியும் (37.10 டிஎம்சி), கிருஷ்ணராஜசாகரில் 10.78 டிஎம்சியும் (49.45 டிஎம்சி), கபினியில் 6.63 டிஎம்சியும் (19.52 டிஎம்சி) தண்ணீர் இருப்பு உள்ளது.
தற்போது கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாத நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு என்பதை நினைத்துக்கூட பார்க்க இயலாத நிலை உள்ளது. எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு நிகழாண்டில் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை என்பதால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: மேட்டூர் மற்றும் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளதால், நிகழாண்டில் ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கு நீர் திறப்பு என்பது சாத்தியமற்ற நிலையிலேயே உள்ளது.
இம்மாத இறுதியில் கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி, ஜூன் மாதத்தில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக அளவில் பெய்யும்பட்சத்தில், அங்குள்ள அணைகள் முழுவதுமாக நிரம்பிய பிறகே தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அளிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு நிகழாண்டில் சாத்தியமில்லை.
மேலும், தற்போது ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை சில விவசாயிகள் தொடங்கியுள்ளனர். ஆனாலும், கடுமையான வெப்பம், நிலத்தடி நீர் குறைவு, போதுமான அளவுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்காதது ஆகியவற்றால் சாகுபடியை தொடர முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர் என்றார்.
இது குறித்து தமிழ்நாடு பொதுப் பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அ.வீரப்பன் கூறியது: தென் மேற்கு பருவ மழை கேரளா, கர்நாடக பகுதிகளில் அதிக அளவில் பெய்தால் தான் நமக்கு காவிரியில் தண்ணீர் கிடைக்கும். போதிய தண்ணீர் இருப்பு இல்லாமல் ஜூன் மாதத்தில் அணை திறக்கப் படாமல் பல முறை தாமதமாக ஆகஸ்ட் மாதத்தில் கூட திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT