Published : 12 May 2024 04:26 AM
Last Updated : 12 May 2024 04:26 AM
சென்னை: கேரளா மாநிலம், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில், ‘வெஸ்ட் நைல்’வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வெஸ்ட் நைல் வைரஸ் உகாண்டா நாட்டில், வெஸ்ட் நைல் மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், அப்பெயரில் அழைக்கப்படுகிறது. வெஸ்ட் நைல் வைரஸ் என்பது, ‘க்யூலக்ஸ்’ வகை கொசுக்களால் பரவக்கூடிய நோய். இந்த வைரஸ்பறவைகளிடம் இருந்து கொசுக்களுக்கும், பின் கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கும் பரவுகிறது. ஆனால், ஒரு மனிதரிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு நேரடியாக பரவுவதில்லை. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான மக்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற பொதுவான அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும். சிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிக காய்ச்சல்,கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம், பக்கவாதம் மற்றும் மூளைக்காய்ச்சல் ஏற்படும்.
இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. ஆனால், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு எளிதாக ஏற்படும். இந்நோய், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, மேற்குஆசியா பகுதிகளில் பரவலாக உள்ளது. சமீபத்தில் கேரளா மாநிலத்தில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெஸ்ட் நைல் வைரஸ் நோய் அறிகுறிகள் இருந்தால், மூளைகாய்ச்சல் போன்ற பாதிப்பு உடையவர்களாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்நோய் ‘எலைசா’ ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கண்டறியலாம். நோய் தொற்று சந்தேகப்படும் நபர்களிடம் இருந்து பரிசோதனைகள் மாதிரிகள் பெறப்பட்டு, புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் பரிசோதிக்க வேண்டும்.
இந்த காய்ச்சல் பரவினால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின்பேரில் எடுத்து கொள்ள வேண்டும். காய்ச்சலால் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க போதியளவு நீர் மற்றும் திரவ உணவை உட்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வீடுகளை சுற்றி சுத்தமாகவைத்து கொள்ள வேண்டும். நீர்தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்று இதற்கு தடுப்பூசிகள் இல்லை.
அதனால், உடனடியாக சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உடல்முழுவதும் மறைக்கும் ஆடை அணிய வேண்டும். கொசுவலை, கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும். சுயமாக சிகிச்சை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு 104 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT