Published : 12 May 2024 05:43 AM
Last Updated : 12 May 2024 05:43 AM
சென்னை: மறைந்த விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை,அவரது நினைவிடத்தில் வைத்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மரியாதை செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண்விருதை, அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா கடந்த 9-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பிரேமலதாவுக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு, தேமுதிக தலைமையகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக சென்று பத்ம பூஷண் விருதை சமர்ப்பிக்க தேமுதிகவினர் முடிவு செய்தனர்.
இதற்காக, ஏராளமான கார் மற்றும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், பிரேமலதா விஜயகாந்தின் வாகனத்துடன் அணிவகுத்து நின்றன. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் சாலையில் பேரணி செல்ல அனுமதி கிடையாது என்று போலீஸார் தடுத்தனர். அவர்களுடன் தேமுதிக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பிரேமலதாவிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும், விருதுடன் பேரணியாக பிரேமலதா விஜயகாந்த், கட்சி தலைமையகத்துக்கு வந்தார். பின்னர், அங்குள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பூஜை செய்து பத்ம பூஷண் விருது மற்றும் பதக்கத்தை கண்ணீருடன் வைத்தார். இந்நிகழ்வில், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை உலகத் தமிழர்கள், தேமுதிக தொண்டர்கள் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன். விருதை மிகுந்த வலியுடன் பெற்றுக் கொண்டேன். விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது விருது கிடைத்திருந்தால் கதர்சட்டை, கதர் வேட்டி அணிந்து விருதை பெற்று, தமிழர்களின் பண்பாட்டை நிலை நாட்டியிருப்பார்.
இனிவரும் ஆண்டுகளில், விஜயகாந்த் பிறந்த நாளில் டெல்லி தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.1லட்சம் நிதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT