Published : 12 May 2024 07:51 AM
Last Updated : 12 May 2024 07:51 AM
சென்னை: உலக செவிலியர்கள் தினத்துக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: செவிலியர்களின் முன்னோடி யான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ம் தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிரீமியப் போரின்போது காயமடைந்த வீரர்களைப் பராமரிப்பதில் நைட்டிங்கேல் அம்மையாரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், துணிவும் இன்றைய செவிலியர் சேவைக்கு அடித்தளமிட்டது. அதை நினைவுகூரும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. சுகாதாரத் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்வதில் நமது செவிலியர்களின் பங்கும் சேவையும் அளப்பரியது. கரோனா பெருந்தொற்றின்போது அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டை நாம் என்றும் மறக்கவியலாது.
அத்தகைய செவிலியர்களின் தொண்டினைப் போற்றும் வகையில், நமது அரசு பொறுப்பேற்ற பின் அவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 1,412 ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.14,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது.
மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,912 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாகப் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டத்தின் மூலம் 2,650 பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.5,100 நிலையான ஊதியம் பெறுகின்றனர். 9,535 செவிலியர்கள் அவரவர் விரும்பிய இடங்களுக்கே பணிமாறுதல்கள் பெற்றுள்ளனர்.
செவிலியர்கள் பதவி உயர்வுபெறும் பொருட்டு செவிலியர் படிப்புகளின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சை ஆகிய பிரிவுகளில் ‘போஸ்ட் பேசிக் டிப்ளமோ’ செவிலியர் பயிற்சிப் பிரிவுகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
மக்கள் நலனில் செவிலியர் களின் பெரும்பங்கினைப் பாராட்டி அவர்களின் தொண்டு மேலும் வளர, உலக செவிலியர் நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன் வாழ்த்து: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டவாழ்த்து செய்தியில், “செவிலியர் களின் தன்னலம் இல்லா பொதுநலத் தொண்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்நாள் கொண்டா டப்படுகிறது. செவிலியர்கள், நோயாளிகளின் உடல் நலன் மட்டுமின்றி அவர்களது மனநலனிலும் அக்கறை செலுத்தி அவர்களை காப்பாற்றுகின்றனர். இரவு, பகல்பாராது பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே தொய்வில்லாமல் பணியாற்றும் செவிலியர் கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT