Published : 03 Apr 2018 09:02 PM
Last Updated : 03 Apr 2018 09:02 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் நாளை முதல் தொடர் போராட்டம் நடத்துவது என்று திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கிரண்பேடியை வெளியேற்றக் கோரி வரும் 12-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றாமல் புதுச்சேரி, தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாக, திமுக சாரபில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். இதில் திமுக வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், தேசிய குழு உறுப்பினர் நாரா. கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் பெருமாள், முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன், அமுதவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். பாஜக மூன்று நியமன எம்எல்ஏக்களை புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பன போன்ற 5 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
தொடர் போராட்டங்கள் தொடர்பாக சிவா எம்எல்ஏ கூறுகையில், "4-ம் தேதி ரயில் மறியல் போராட்டம், 5-ம்தேதி முழு நேர வேலை நிறுத்தம், 9-ம் தேதி எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களின் போராட்டத்தின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கண்டனக் கூட்டம் வரும் 12-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத மத்திய அரசின் மீது புதுச்சேரி அரசு தொடுக்க முயன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை விதித்துள்ள ஆளுநர் கிரண்பேடியை வெளியேற்றக் கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை, 15-ம் தேதி பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு மத்திய அரசைக் கண்டித்து 3 ஆயிரம் இரு சக்கர வாகன கருப்புக் கொடி பேரணி புதுச்சேரி நகர் முழுவதும் நடத்துவது என்பன போன்ற தொடர் போராட்டங்கள் நடத்துவது முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT