Published : 11 May 2024 09:24 PM
Last Updated : 11 May 2024 09:24 PM
சென்னை: “மருத்துவத் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்வதில் நமது செவிலியர்களின் பங்கும் சேவையும் அளப்பரியது. கோவிட் பெருந்தொற்றின் போது அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டை நாம் என்றும் மறக்கவியலாது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் “உலக செவிலியர்” தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “செவிலியர்களின் முன்னோடியான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12 ஆண்டுதோறும் உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிரீமியப் போரின்போது காயமடைந்த வீரர்களைப் பராமரிப்பதில் நைட்டிங்கேல் அம்மையாரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், துணிவும் இன்றைய செவிலியர் சேவைக்கு அடித்தளமிட்டது. அதை நினைவுகூரும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
மருத்துவத்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்வதில் நமது செவிலியர்களின் பங்கும் சேவையும் அளப்பரியது. கோவிட் பெருந்தொற்றின் போது அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டை நாம் என்றும் மறக்கவியலாது. அத்தகைய செவிலியர்களின் தொண்டினைப் போற்றும் வகையில், அரசு பொறுப்பேற்ற பின் அவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் நலனில் செவிலியர்களின் பெரும்பங்கினைப் பாராட்டி அவர்களின் தொண்டு மேன்மேலும் வளர, உலக செவிலியர் நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT