Last Updated : 02 Apr, 2018 02:27 PM

 

Published : 02 Apr 2018 02:27 PM
Last Updated : 02 Apr 2018 02:27 PM

புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா: கிரண்பேடி மீது குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான புதுச்சேரி அரசின் மேல் முறையீட்டு மனுவை கிரண்பேடி மறுத்துள்ளதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி ராஜ்நிவாஸ் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி நதி நீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரியில் பலவித போராட்டங்கள் நடந்து வருகின்றன.

புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் காவிரி பிரச்சினை தெடார்பாக விவாதிக்க புதுச்சேரி அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது தொடர்பான கோப்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய அரசு மீது எவ்வாறு வழக்கு தொடரமுடியும் என்று கேள்வி எழுப்பி கோப்பினை திரும்பி அனுப்பியதாக தெரிய வந்துள்ளது.இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரிமணிகண்டன் ஆகியோர் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் முன்பு தர்ணாவில் ஈடுபடத் தொடங்கினர்.

அவர்கள் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் புதுச்சேரி அரசு மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியை கிரண்பேடி வழங்காததைக் கண்டித்தும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.

தற்போது பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ளார். வரும் 5-ம் தேதிதான் அவர் புதுச்சேரி திரும்புவார் என தெரிகிறது. கோப்பு அனுமதி மறுக்கப்பட்டதா என்ற கேள்வியை ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டதற்கு, "கோப்பு பரிசீலனையில் உள்ளது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x