Published : 23 Apr 2018 08:55 AM
Last Updated : 23 Apr 2018 08:55 AM
செங்கல்பட்டு, அரக்கோணம், ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம், அந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் ரோடு ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்குப் பிறகு ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல், பயணிகள் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரயில் நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி, புறநகர் ரயில் நிலையங்கள், புறநகர் அல்லாத ரயில் நிலையங்கள் மற்றும் மிகச் சிறிய ரயில் நிலையங்கள் என ரயில் நிலையங்கள் 3 வகையாக தரம் பிரிக்கப்படுகின்றன. என்எஸ்ஜி (நான் சபர்பன் கிரேடு) 1 முதல் 6 வரையிலும், எஸ்ஜி (சபர்பன் கிரேடு) 1 முதல் 3 வரையிலும், எச்ஜி (ஹால்ட் கிரேடு) 1 முதல் 3 வரையிலும் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
இப்புதிய முறையின்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு என்எஸ்ஜி-1 என்ற உயர்ந்த கிரேடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், ஆவடி, செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி, கோவை, மதுரை மற்றும் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய 11 ரயில் நிலையங்களுக்கு என்எஸ்ஜி-2 என்ற கிரேடு வழங்கப்பட்டுள்ளது.
முன்னர், ‘பி-கிளாஸ்’ பிரிவில் இருந்த ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையங்கள் தற்போது என்எஸ்ஜி-2 கிரேடு என்ற நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அதே சமயம், ரயில்வே கோட்டத்தின் தலைமையகம் உள்ள சேலம், திருச்சி, பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்கள் என்எஸ்ஜி-3 கிரேடுக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும், பெரிய ரயில் நிலையங்களாக கருதப்படும் ஜோலார்பேட்டை, விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவி்ல், நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மங்களூர், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா ஆகிய ரயில் நிலையங்கள் என்எஸ்ஜி-3 என்ற கிரேடின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
என்எஸ்ஜி கிரேடு-1 என தரம் பிரிக்கப்பட்டுள்ள 3 ரயில் நிலையங்கள் மற்றும் என்எஸ்ஜி கிரேடு-2 என தரம் பிரிக்கப்பட்ட 11 ரயில் நிலையங்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தற்போது புதிதாக தரம் உயர்த்தப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். அதன்படி பயணிகள் ஓய்வறை, கூடுதல் மின்விளக்குகள், ரயில் பெட்டிகளின் விவரங்களை தெரிவிப்பதற்கான மின்னணு தகவல் பலகைகள், லிப்டுகள், நடைமேடை மேற்கூரைகள், நடைமேம்பாலங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவதற்கென பிரத்யேக பாதை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்காக, அந்த ரயில் நிலையங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT