Published : 23 Apr 2018 07:55 PM
Last Updated : 23 Apr 2018 07:55 PM
பாம்பன் பாலம் கடற்பகுதியில் கடல் நீரை உறிஞ்சுவது போல உண்டான சுழல் காற்று வீடியோ காட்சியொன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் தென் மாவட்ட கடலோரப் பகுதிகளான ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் ஓசானிக் பினாமினா ( Oceanic Phenomenon ) எனப்படும் கடல் சீற்றம் காணப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பாம்பன் கடற்பகுதியில் கடல் நீரை உறிஞ்சுவது போல உண்டான சுழல் காற்று வீடியோ காட்சி தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கடலின் மேல் வீசக்கூடிய காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் சுழல் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படுகிறது. பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது சூழல் ஏற்படுவதும், மீண்டும் இரண்டு காற்றின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது சூழல் மறைந்து விடும். இந்த அதிசய நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும்.
கடலில் அரிதாக நிகழக்கூடிய இத்தகைய சுழல் நிகழ்வை கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், கடலில் பயணம் மேள்பவர்கள், வானியல் ஆய்வாளர்கள் ஆகியோர் காண வாய்ப்புகள் அதிகம் உண்டு.
பாம்பன் பாலம் அருகே விசைப்படகு மீனவர்களின் கைபேசியில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஓசானிக் பினாமினா அறிவிப்புக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டதா? அல்லது பின்னர் பதிவு செய்யப்பட்டதா என மீனவர்களிடம் விசாரித்து வருகிறோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT