Last Updated : 24 Apr, 2018 10:38 AM

 

Published : 24 Apr 2018 10:38 AM
Last Updated : 24 Apr 2018 10:38 AM

சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த பிஹார் இளைஞர் கைது: பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர்- சினிமாவை மிஞ்சும் பரபரப்பு காட்சிகள்

சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த பிஹார் இளைஞரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் பட்டப்பகலில் நடந்த கொள்ளைச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் நிழற்சாலையில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னர் நேற்று காலை வங்கி வழக்கம்போல் செயல்பட தொடங்கியது. வாரத்தின் முதல் நாள் என்பதால் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்தது.

பின்னர் மதியம் 1 மணிக்கு கூட்டம் சற்று குறைந்தது. மதிய உணவு நேரம் என்பதால் 6 பேர் மட்டுமே வங்கியில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு 20 வயது மதிக்கத்தக்க வட மாநில இளைஞர் ஒருவர் கையில் சாதாரண பை ஒன்றுடன் வங்கிக்குள் நுழைந்துள்ளார். வாடிக்கையாளர் ஒருவரிடம் மேலாளர் அறையைக் கேட்டு, அங்கு சென்றுள்ளார்.

தனி அறையில் இருந்த மேலாளரான முகமது அஸ்ரத்திடம் அந்த இளைஞர் சென்றுள்ளார். முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு அதன் மேல் ஹெல்மெட் அணிந்தவாறு உள்ளே சென்றுள்ளார். பின்னர், தனக்கு வங்கி கடன் வேண்டும் என மேலாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முதலில் ஹெல்மெட்டை கழற்றுமாறு கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இளைஞர் அறையின் கதவை உள் பக்கமாக பூட்டியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த மேலாளர், போலீஸில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என எச்சரித்துள்ளார். இதை காதில் வாங்காத அந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வங்கி மேலாளரின் நெற்றிப் பொட்டில் வைத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத மேலாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.

தப்பி ஓட்டம்

இதைத் தொடர்ந்து அவரிடம் பேசிய கொள்ளையன், பணத்தை கொடுத்து விட்டால் யார் உயிருக்கும் ஆபத்து இல்லை என மிரட்டல் தொனியில் தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் வங்கி காசாளராக இருந்த ஊழியர் ஒருவரை அழைத்து பணத்தை மேலாளர் கொடுத்துள்ளார். துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு அதை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு மேலாளர் அறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

வெளியே நின்ற ஊழியர்கள், வாடிக்கையாளர்களையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, “யாராவது சத்தம் போட்டால், சுட்டுவிடுவேன்” என எச்சரித்துள்ளார். தொடர்ந்து அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து, பின்னர், வங்கியில் இருந்த அறை ஒன்றில் தள்ளி கதவை சாத்தியுள்ளார்.

பின்னர் வெளியே நிறுத்தி இருந்த பைக்கில் தப்பியுள்ளார். வங்கிக்குள் இருந்த அனைவரும் “திருடன்.. திருடன்..” என கூச்சலிட்டனர். வாடிக்கையாளர்களில் ஒருவரான மோகன் ராஜ் என்பவர் தனது பைக்கில் கொள்ளையனை விரட்டினார். “கொள்ளையனை பிடியுங்கள்... பிடிங்கள்” என சத்தமிட்டவாறே பின்தொடர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சிலரும் விரட்டியுள்ளனர். அவர்களை நோக்கி அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு படவில்லை. இதற்கிடையில் அரை கி.மீ. தூரத்தில் மற்றொரு வாகனம் மீது மோதி கொள்ளையன் பைக் விபத்தில் சிக்கியது. அதை அங்கேயே போட்டுவிட்டு அந்த நபர் ஓட்டம் பிடித்தார்.

பொதுமக்கள் அடி உதை

இதனிடையே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜோசப் தலைமையிலான போக்குவரத்து போலீஸார் கொள்ளையடித்த நபரை மடக்க முயன்றனர். அதற்குள் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் 9-வது அவென்யூவில் அவரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீஸார் இணைந்து அந்த நபரை பிடித்து அடையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்டது, பிஹாரைச் சேர்ந்த மனிஷ் என்ற மனிஷ் குமார் (21) என போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

இவர் நண்பர்களுடன் கேளம்பாக்கம் பாலு முதலியார் தெருவில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். மேலும் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சினிமாவை மிஞ்சும் காட்சிகளைப் போல அரங்கேறிய இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தொடரும் வங்கி கொள்ளை

சென்னையில் கடந்த 2012-ல் பெருங்குடி, கீழ்கட்டளையில் உள்ள வங்கிகளில் அடுத்தடுத்து துப்பாக்கி முனையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 5 கொள்ளையர்களை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

தற்போது கடந்த மாதம் விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது அடையாறில் உள்ள வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேறு யாருடன் தொடர்பு?

அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள மனிஷ் குமார் வங்கியில் கொள்ளையடிக்கும் முன்பு புளுடூத் உதவியுடன் செல்போனில் யாரிடமோ பேசியுள்ளார். இதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனால், வங்கி கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கியில் காவலாளி இல்லை என்று கூறப்படுகிறது. இதை நோட்டம் விட்ட அந்த நபர் வங்கி ஊழியர்கள் மதிய உணவருந்த செல்லும் நேரத்தில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக மேலும் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ரயிலில் வந்த துப்பாக்கி

கைது செய்யப்பட்ட மனிஷ் குமார் தனது சொந்த மாநிலமான பிஹாரிலிருந்து துப்பாக்கியை வாங்கி ரயில் மூலம் சென்னை கொண்டு வந்துள்ளார். அதை நீண்ட நாட்களாக வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளார். கடந்த ஆண்டு மெரினாவில் தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார். விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையிலேயே கொள்ளையில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் அவர் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x