Published : 10 May 2024 05:42 PM
Last Updated : 10 May 2024 05:42 PM
சென்னை: அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. மேலும், சத்தியஞான சபைக்கு சொந்தமான 106 ஏக்கர் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை முன்பு இருக்கும் 70 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அரசாணை வெளியிட்டது. பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோத, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான அரசாணையை எதிர்ப்பது ஏன்?, அதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?, வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைந்தால் வள்ளலாரின் தத்துவங்கள், கொள்கைகள் உலகம் முழுவதும் பரவும் அல்லவா?, வள்ளலாரின் தத்துவங்களை ஊக்கவிக்கும் அரசு முடிவில் எந்த தவறும் இல்லையே? என்று கேள்வி எழுப்பினர். அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே அரசு முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும் என கருத்து தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர் தரப்பில், “கடந்த 1867-1872ம் ஆண்டுகளில், 106 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட சத்தியஞான சபை அப்படியே இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் விருப்பம். மேலும் பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்வது வள்ளலாரின் விருப்பத்துக்கு முரணானது. இதற்கு சான்றாக, வள்ளலாரின் ஆறாம் திருமுறை, உத்திர ஞான சிதம்பர மான்மியம் உள்ளிட்ட பாடல்கள் மேற்கோள்காட்டப்பட்டது. மேலும் பெருவெளியில் புராதன சின்னங்கள் இருப்பதாக தொல்லியல் துறை அறிக்கையில் தெரிவித்திருப்பதால், அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளக்கூடாது”” என வாதிடப்பட்டது.
அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடர், “தொல்லியல் துறை ஆய்வில், இப்பகுதியில் சில கட்டுமானங்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் எவ்விதமான கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாது” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “சத்தியஞான சபையில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்களை பராமரிப்பதில் ஏன் இவ்வளவு மெத்தனம்?, எப்படி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்பட்டன?, சர்வதேச மையம் கட்ட திட்ட அனுமதி பெறப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து, மொத்தமுள்ள 106 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
அப்போது அரசுத் தரப்பில், “அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே, வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் தொடங்கப்படும். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது. மேலும், சத்திய ஞான சபைக்கு அறங்காவலர் நியமிப்பது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT