Published : 10 May 2024 03:28 PM
Last Updated : 10 May 2024 03:28 PM
சென்னை: “தமிழகத்தில் 2023-ம் ஆண்டு முதல் இதுவரை 280 பேர் உடலுறுப்பு தானம் செய்யப்பட்டு 1,595 பேருக்குப் பொறுத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளனர். உடலுறுப்பு தானம் செய்த 159 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் நீர்மோர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர், கந்தன்சாவடி , கொட்டிவாக்கம், கடற்கரைச் சாலை போன்ற நான்கு இடங்களிலும் நீர், மோர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழக முதல்வர் கடந்தாண்டு 2023 செப். 23-ம் தேதி இந்தியாவில் இருக்கிற மனிதநேயர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார். அது, உடல் உறுப்பு தானம் செய்வது என்பதாகும்.
இறந்துபோனவர்கள், குறிப்பாக மூளைச்சாவு அடைந்தவர்கள் தங்களுடைய உடலுறுப்புகள் தானம் செய்கிற வகையில் அவரது உற்றார் உறவினர்கள் அனுமதிக்கும் பட்சத்தில் உடலுறுப்பு தானம் செய்தவருடைய உடலுக்கு, அதாவது மூளைச்சாவு அடைந்தவருடைய உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று அறிவித்தார். அவரது அறிவிப்பு இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்கிற பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் அந்த அறிவிப்பை வெளியிட்டதற்குப் பிறகு, செப்டம்பர் 23-ம் தேதிக்குப் பிறகு பொதுமக்கள் ஆர்வம்கொண்டு மூளைச்சாவு அடைந்தவருடைய உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்து தானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 2023-ம் ஆண்டைப் பொறுத்தவரை இதுவரை 178 பேர் உடலுறுப்பு தானம் செய்திருக்கிறார்கள். 178 பேர் உடலிலிருந்து 1000 உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டு 1000 பேர் பயனடைகிற வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 2022-ம் ஆண்டைப் பொறுத்தவரை இந்திய அளவில் உடலுறுப்பு தானம் செய்வதிலும், உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. அதற்காக சிறப்பு விருது ஒன்றைத் தந்தார்கள். அந்த ஆண்டு உடலுறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 156. ஆனால் அதற்கடுத்த ஆண்டு 178 மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலிலிருந்து உடலுறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, ஆயிரம் உடலுறுப்புகள் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அதைவிட இந்தாண்டு 2024 இந்நாள்வரை 130 நாட்களில் 102 மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடலுறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. கடந்தாண்டு முழுவதும் 178 மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்தும், அதற்கு முந்தைய ஆண்டு 156. இந்தாண்டு 130 நாட்களில் 102 மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடலுறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதுவரை 159 மூளைச்சாவு அடைந்தவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT