Published : 10 May 2024 10:33 AM
Last Updated : 10 May 2024 10:33 AM
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் 10 பேர் உயிரிழந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில், சட்ட விரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோரை சிவகாசி கிழக்கு போலீஸார் இன்று (மே.10) காலை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (55). இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று கீழதிருத்தங்கல் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட செங்கமலப்பட்டியில் சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் வியாழன் பிற்பகல் 2 மணி அளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் இருந்த 7 பெரிய அறைகள் (வால் மவுண்ட்) முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மருமகள் என 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒரு பெண் கர்ப்பிணி எனக் கூறப்படுகிறது. விபத்து சிவகாசி கிழக்கு போலீஸார், ஆலை உரிமையாளர் சரவணன், மேலாளர், போர்மேன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய 4 பேர் மீது வெடிபொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஒப்பந்ததாரர் முத்து கிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகிய இருவரை இன்று காலை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்துக்கு காரணம் என்ன? சிறிய பட்டாசு ஆலைகளுக்கு டி.ஆர்.ஓ உரிமம், நடுத்தர ஆலைகளுக்கு சென்னை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம், பெரிய ஆலைகளுக்கு நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம்(பெசோ) என்ற 3 விதமாக உரிமங்கள் வழங்கப்படுகிறது. விதிகளின் படி, உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.
ஆலையை குத்தகைக்கு எடுத்து பட்டாசு உற்பத்தி செய்வது சட்ட விரோதமாகும். விபத்து நடந்த பட்டாசு ஆலையை திருத்தங்கலை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்து, அதிக பணியாளர்களை கொண்டு பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளார்.
மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தே அனுபவம் இல்லாத தொழிலாளர்களை, முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆபத்தான வெடி பொருட்களை கையாண்டதால் விபத்து ஏற்பட்டு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் கடந்த 4ம் தேதி நடந்த பட்டாசு தொழில் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில் சட்டவிரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்துபவர்கள், விதிமீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் விதிமேறி சட்டவிரோதமாக உற்பத்தி நடப்பதால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT