Published : 10 May 2024 09:39 AM
Last Updated : 10 May 2024 09:39 AM
சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.
பாடவாரியாக தமிழில் 8, ஆங்கிலத்தில் 415, கணிதத்தில் 20691 பேர், அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4.,428 பேர் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர் 97.31% உடன் முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 5 பட்டியலில் இடம்பெறுள்ளன.
பள்ளிகள் வகைப்பாடு வாரியாக தேர்ச்சி விகிதம்: 10 ஆம் பொதுத் தேர்வில் 87.90% அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிவது எப்படி? www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளிமாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (என்ஐசி) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழகம் முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை எழுத 9 லட்சத்து 10,175 பள்ளி மாணவர்கள், 16,488 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9.26 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 9.08 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, 88 முகாம்களில் ஏப்ரல் 12-ல் தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது. பின்னர், இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT