Published : 17 Apr 2018 09:51 AM
Last Updated : 17 Apr 2018 09:51 AM
இ
ந்தியாவில் 2003-ம் ஆண்டுக்குப் பிறகுதான் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதுவரை 215 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று, கர்நாடகா முதலிடம் பெற்றுள்ளது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலை, கோடாலிக்கருப்பூர் சேலை, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, தஞ்சை மர பொம்மைகள் உட்பட 17 பொருட்கள் புவிசார் குறியீட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடரின மக்களின் பாரம்பரிய தையல் வேலைப்பாடான எம்பிராய்டரிக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.
தோடரின மக்கள் பாரம்பரியமாக உடுத்தும் ஆடை ‘பூத்துக்குளி’. விழாக் காலங்களிலும் இறுதிச் சடங்குகளிலும் இந்த பாரம்பரிய ஆடையை உடுத்திக் கொண்டுதான் பங்கேற்க வேண்டும். பருத்தியிலான வெண்ணிற ஆடையில் சிவப்பு, கருப்பு நிற நூலால், உடலில் பச்சை குத்துவதுபோல, அதே வடிவமைப்பில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.
பூ வேலைப்பாடுகள் கையால் மட்டுமே செய்யப்படுவதால் விலை அதிகம். இந்த ஆடைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். புவியியல் குறியீடு கிடைத்துள்ளதால், இந்த கலையை பாதுகாக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
உதகை தாவரவியல் பூங்காவிலுள்ள அங்காடி பொறுப்பாளர் வத்சலா கூறும்போது, “எங்களின் பொருட்கள் தையல் வேலைப்பாடுகள் நிறைந்துள்ளதாலும், துணியின் விலை அதிகமாக உள்ளதாலும் வர்த்தகரீதியாக விலை போகவில்லை. மப்ரல் ரூ.700-க்கும், சால்வை ரூ.1200 முதல் ரூ.1500-க்கு விற்கிறோம். தற்போது, இந்த பூ வேலைபாடுகள் அடங் கிய பிற பொருட்களாலான தலையணை உறைகள், செல் போன் உறைகள், அலங்கார விரிப்புகளை தயாரித்து விற்கிறோம். விலை அதிகமாக இருப்பதால், பலர் வாங்க தயங்குகின்றனர் என்றார்.
தோடர் பெண்கள் கூட்டமைப் பின் நிர்வாகி வாசமல்லியோ, “எங்களின் எம்ராய்டரிக்கு புவி சார் குறியீடு கிடைத்தது. இதன் மூலமாக, உலகளவில் விற்பனை அதிகரிப்பதுடன், இக்கலையை விரும்பும் வாடிக்கையாளர்கள், இதன் தனித்தன்மையை உணர்ந்து உரிய விலை தர வழி வகை ஏற்படும் என எதிர்பார்த்தோம். எங்களின் பொருட்களை விற்பனை செய்ய நிரந்தர இடமில்லை. எங்கள் மக்கள் பல இடங்களில் வசிக்கின்றனர். அவர்களுக்கு சந்தைப்படுத்துதல் குறித்து விழிப்புணர்வும் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லாததால், பாரம்பரிய கலை குறித்து வெளி யில் அதிகம் தெரியவில்லை. உதகையிலுள்ள பழங்குடியினர் ஆதார மையத்தில் இடம் வழங்குவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. நிரந்தர விற்பனையகம் இருந்தால், எங்களின் பொருட்களுக்கு வெளிச்சம் கிடைக்கும்” என்றார். பாரம்பரியமிக்க தோடர் இன மக்களின், வேலைப்பாடுமிக்க இந்த தையல் கலையும் பாரம்பரியமிக்கதாகவே இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment