Published : 09 May 2024 09:12 PM
Last Updated : 09 May 2024 09:12 PM

செய்தித் தெறிப்புகள் @ மே 9 - தமிழகத்தில் 23 வகை நாய் இனங்களுக்கு தடை முதல் சவுக்கு சங்கர் வழக்கு அப்டேட் வரை

ராட்வைலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்களுக்கு தடை: ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வைலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து: 8 பேர் பலி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே 15 வரை பரவலாக மழை வாய்ப்பு

தமிழகத்தில் மே 15-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மற்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மே 12-ம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்: சந்தேஷ்காலி சம்பவத்தில் ஒரு பெண்ணும், அவரது மாமியாரும் தங்கள் புகார்களை வாபஸ் பெற்றுள்ளனர். தங்களைக் கட்டாயப்படுத்தி வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து பெற்று, அதில் ஏதோ எழுதிக் கொண்டனர். அதனால் புகாரை வாபஸ் பெறுவதாக அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்த அந்த இரு பெண்களும் தாங்கள் பாலியல் வன்கொடுமை புகாரில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றதால் தாங்கள் மிரட்டப்படுவதாக புதிய புகார் ஒன்றை போலீஸில் கொடுத்துள்ளனர்.

முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து: அமித் ஷா உறுதி: பாஜக வெற்றி பெற்றால் தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

‘ஹரியாணாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’: ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்பப் பெற்ற நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையில் சவுதாலா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘இந்துக்கள் மக்கள்தொகை சரிவு’: இந்தியாவில் கடந்த 1950-க்கும், 2015-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்து மக்கள்தொகையில் 7.8% சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள்தொகையில் 43.15% உயர்ந்துள்ளதாகவும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சவுக்கு சங்கர் மீது மேலும் இரு வழக்குகள்: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர், பெண் பத்திரிகையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிந்திருந்தனர். அதேபோல், தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி அளித்த புகாரின் பேரிலும் சவுக்கு சங்கர் மீது சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிந்திருந்தனர். இதையடுத்து, அவர் மீது பதிவான வழக்குகள் 5 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த தகுந்த நேரமிது” - ஐகோர்ட்: 'சவுக்கு ஆவேசம்... இப்படியும் செய்யுமா காவல் துறை!' என பதிவிட்டு, பெண் காவலர்கள் குறித்த சவுக்கு சங்கரின் வீடியோவை வெளியிட்ட ‘ரெட் பிக்ஸ்’ யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால் முன்ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது. நேர்காணல் கொடுக்க வருபவர்களை அவதூறான கருத்துகளைத் தெரிவிக்க தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார். பின்னர், இந்த முன்ஜாமீன் மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

“இந்திய தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சி” - ரஷ்யா: இந்திய மக்களவைத் தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. உள்நாட்டு அளவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கொள்முதல் நிலைய வசதிகளை மேம்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்: செஞ்சியில் கோடைமழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்ததை மூடி மறைக்க முயல்வதை விடுத்து கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவதூறாகப் பேசியது போன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படாது - மாலத்தீவு: பிரதமர் மோடியை அமைச்சர் ஒருவர் அவதூறாகப் பேசியது போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மறந்து மோடி செயல்படுகிறார்”: “காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து பாஜக பொய்களை பரப்பி வருகிறது. பிரதமர் மோடி தனது பதவியின் கண்ணியத்தை மறந்து செயல்பட்டு வருகிறார்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க நடவடிக்கை: தமிழகத்தில் வெப்ப அலை வீசுவதால் சிறுவர், சிறுமியரின் நலன் கருதி கோடைவிடுமுறை நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிர்த்திட வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.

30 லட்சம் பணியிடங்கள்- ராகுல் காந்தி வாக்குறுதி: “இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து பல்வேறு அரசு துறைகளில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலையைத் தொடங்கும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x