Published : 09 May 2024 02:56 PM
Last Updated : 09 May 2024 02:56 PM
புதுச்சேரி: “யார் பிரதமர் என்பதை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள். ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தரம்தாழ்ந்து பொய் பேசி வருகிறார். ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். பிரதமர் என்ற நிலையிலிருந்து தடுமாறியுள்ளார். உண்மையில் அவர் குழம்பிபோயுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளை பற்றி பேசாமல், புலம்பி வருகிறார். தினமும் தன் நிலையிலிருந்து மாறி, மாறி பேசி தடம் புரண்டு வருகிறார்.
நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். 7 கட்ட தேர்தல் முடியும் நிலையில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். யார் பிரதமர் என்பதை இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள். ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெறுவார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி 3 ஆண்டு முடிந்து 4-ம் ஆண்டை தொடங்கியுள்ளது. இந்த ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்தான் அளிக்க முடியும். எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லை. தேர்தலில் கூட முதல்வர் ரங்கசாமி, ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசவில்லை.
புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு ஆகியவை உருவாக்கப்படவில்லை. கஞ்சா, அபின் தாராளமாக விற்பனையாகிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் புதுவையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல மாநில அரசு அளித்த வாக்குறுதிகளான மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் சேர்ப்பது, கடன் தள்ளுபடி ஆகியவை நிறைவேற்றப்படவில்லை.
தற்போது நீட் தேர்வு மூலம்தான் நர்சிங் மாணவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்க்க வேண்டும்” என்று நாராயணசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT