Published : 09 May 2024 06:20 AM
Last Updated : 09 May 2024 06:20 AM
பம்மல்: எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை மூட சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த எஸ்.ஹேமச்சந்திரன் (26) என்ற இளைஞருக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சையை கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக பல்லாவரம் அருகே பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனை மேற்கொண்டிருந்தது.
அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவத் துறை அமைச்சர் உரிய விசாரணை குழுவை அமைத்திருந்த நிலையில், விசாரணை குழு விசாரணை அறிக்கையை 2 தினங்களுக்கு முன்னதாக மருத்துவத் துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில், மருத்துவமனை மீது மருத்துவத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று உறுதியானதை அடுத்து, தனியார் (பி.பி.ஜெயின்) மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை. மருத்துவமனையில் போதுமான அளவு டெக்னீசியன்கள் இல்லை. அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோரிடம் உரிய தகவலை தெரிவித்து மருத்துவமனை நிர்வாகம் கையெழுத்து பெறவில்லை.
அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லை. அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனை மீது பல தவறுகள் இருப்பதால் தற்காலிகமாக மூட சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. உரிய மருத்துவர்கள், சிகிச்சைக்கான கருவிகளை ஏற்பாடு செய்யவும் மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் மேலும், நோயாளிக்கு மருத்துவ வசதிகள் குறைவாகவும், அறுவை சிகிச்சையின் போதோ, அறுவை சிகிச்சைக்கு பின்போ திடீரென்று ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கான மருத்துவர்கள் இல்லாத இடத்தில் வைத்து அறுவை சிகிச்சையை செய்ததாலும் மருத்துவர் டி. பெருங்கோ மீதும், சம்பந்தப்பட்ட மற்ற மருத்துவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 1 Comments )
ஆனால் மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால். மருத்துவக்கழகம் முதல் உள்ளூர் நிர்வாகம் வரை எல்லோரும் எவனாவது செய்தால் தான் நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஆய்வுக்கு வருகிறீர்கள்.. என்ன சார் உங்க டக்கு ?
1
0
Reply