Published : 09 May 2024 04:02 AM
Last Updated : 09 May 2024 04:02 AM
கடலூர் / விழுப்புரம் / புதுச்சேரி: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மார்ச் மாதத்தின் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் சதத்தை தாண்டி வெயில் வாட்டி வதைத்தது. பிற்பகல் நேரங்களில் அனல் காற்று வீசியதால் சாலை களில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இரவில் புழக்கத்தில் உறங்க முடியாமல் மக்கள் தவித்தனர்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திடீர் மழையின் காரணமாக விழுப்புரம் நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. புதிய பேருந்து நிலையம், கீழ்பெரும்பாக்கம் தரைப் பாலம் உள்ளிட்டப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். காணையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.
குறிப்பாக சீனி வாசா நகரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினர். மழை நீரை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள், காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.
மழை நின்ற பிறகும் கூட குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை அகற்ற காணை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள், விழுப்புரம் - திருக்கோவிலூர் இடையிலான மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவ லறிந்த காணை போலீஸாரும், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கை விடச் செய்தனர்.
இதற்கிடையே செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமார் 6,000 நெல் மூட்டைகள் மற்றும் வியாபாரிகள் கொள்முதல் செய்து வைத்த 6,000 நெல் மூட்டைகள் என சுமார் 12,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
இதற்கிடையே நெல் மூட்டைகள் சேதம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நேற்று முன் தினம் (மே.7) விவசாயிகளிடம் கொள் முதல் செய்யப்பட்ட 4,500 நெல் மூட்டைகள் மட்டும் சிறிதளவு மழையில் நனைந்தது. விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த நெல்மூட்டைகள் கிடங்கில் வைத்து பாதுகாப்பாக ஏலம் நடைபெற்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் இருந்த இந்த சூழல் அனைத்தும் மதியத்திற்குள்ளாக மாறியது. ஏற்கெனவே வறண் டிருந்த நிலப்பகுதி நீரை ஈர்த்து, பல இடங்களில் மழை பெய்த சுவடே இல்லாமல் மாறிப் போனது. மதியத்துக்குப் பின் அடித்த வெயிலைத் தொடர்ந்து மாலையில் வழக்கம் போல் புழுக்கமான சூழல் நிலவியது. இருப்பினும் இந்த திடீர் கோடை மழையால், மிதமிஞ்சிய நிலையில் இருந்த வெப்பமான சூழல் சற்றே குறைந்துள்ளது.
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று கோடை மழை பெய்தது. கடலூர், நெல்லிக் குப்பம், பண்ருட்டி, நடு வீரப்பட்டு, சிதம்பரம், குமராட்சி, வடலூர், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காலையில் பலத்த மழை பெய்தது. விருத்தாசலம், காட்டு மன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லேசாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்று அடித்தது. விருத்தாசலம் சாவடி குப்பம் 33 வது வார்டு பகுதியில் மின் கம்பம் விழுந்ததில் பாஸ்கர் என்பவரின் 9 மாத சினை பசு உயிரிழந்தது.
புதுச்சேரி: புதுச்சேரியில் பிப்ரவரி முதலேயே கோடைபோல வெயி லடித்து வந்தது. ஏப்ரல் மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தினமும் 96 முதல் 98 டிகிரி வரை வெயில் பதிவானது. மே 1-ம் தேதி 100.4 டிகிரி வெயில் பதிவானது. மே 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அன்றைய தினமும் 100.4 டிகிரி வெயில் பதிவானது. தொடர்ந்து சில நாட்களாக 97 டிகிரிக்கு குறையாமல் வெயில் சுட்டெரித்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை புதுச்சேரியில் வானம் மேக மூட்டத்துடன், குளிர்ந்த காற்று வீசியது.பாகூர், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில், சேலியமேடு மற்றும் வில்லியனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 7 மணிக்கு இடி, பலத்த காற்றுடன் கூடிய கோடை மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரம் கொட்டிய மழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் ஓடியது. கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மரக்கிளைகள் உடைந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் சுமார்3 மணி நேரமாக மின்சாரம் தடைபட்டது. இதனால் குழந்தைகள், முதிய வர்கள் அவதிக்குள்ளாகினர்.
வழுக்கிய வாகனங்கள்: கிராமப் புறங்களில் மழை கொட்டி தீர்த்த நிலையில் புதுச்சேரி நகர பகுதிகளில் மழை பெய்யவில்லை. நகர பகுதியை ஒட்டியுள்ள லாஸ்பேட்டையில் லேசான மழை பெய்தது. லாஸ்பேட்டையில் கல்லுாரி சாலை, விமான நிலைய சாலையில் அதிகளவில் மரங்கள் உள்ளது. இந்த மரங்களில் ‘ரெயின் ட்ரீ’ என்ற மரங்களும் உள்ளன. மரத்திலிருந்த பூக்கள், காய், பழம் ஆகியவை காற்றில் அதிகளவில் சாலையில் விழுந்தன.
இதன் மீது கார், லாரி வாகனங்கள் சென்றபோது காய், பழம், பூ நசுங்கி பிசின்போல மாறி, சாலையில் ஓடிய தண்ணீரில் பரவியது. இது வழுக்கும் தன்மை கொண்டதாலும், அந்த சாலை சரிவாக இருந்ததாலும், இருசக்கர வாகனங்களில் வந்த பலர் பிரேக் பிடிக்காமல் வழுக்கி விழுந்தனர். இதையடுத்து அந்த பகுதியினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் வாகனத்தில் வந்து சாலையில் தண்ணீரை வேகமாக அடித்து அதை அப்புறப்படுத்தினர். சிறிதுநேரம் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல வேண்டாம் எனவும் தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர்.
மரம் முறிந்து விழுந்து ஒருவர் மரணம்: சிதம்பரம் அருகே உள்ள கிழக்கு பின்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் மகன் உதயகுமார் (52). இவர் நேற்று வீட்டில் இருந்து அவரது இருசக்கர வாகனத்தில் பின்னத்தூர் கடை வீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று அடித்தது; லேசாக மழை பெய்தது. இதில் சாலையில் இருந்த தென்னை மரம் முறிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT