Published : 20 Aug 2014 11:41 AM
Last Updated : 20 Aug 2014 11:41 AM

ஆட்டு கொட்டகைக்குள் புகுந்த புலி: மக்கள் தாக்கியதால் படுகாயம்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது ஆதிவாசி கிராமம் நம்பியார்குன்னு. இங்குள்ள மக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த ஆட்டு கொட்டகைக்குள் திங்கள்கிழமை இரவு புலியின் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கொட்டகைக்குள் பார்த்தபோது புலி இருந்தது. மேலும், அதன் அருகே ஆடு இறந்து கிடந்துள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் தாக்கியதில் புலி காயமடைந்துள்ளது. இதையடுத்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ரகுராம் சிங், துணை இயக்குநர் சந்திரன், நீலகிரி வன உயிரின சங்க நிர்வாகி சாதிக் மற்றும் வன ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பலத்த காயமடைந்து நகர முடியாமல் இருந்த புலியை மீட்டு, வனத் துறையினர் தெப்பக்காட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் விஜயராகவன், புலிக்கு முதலுதவி அளித்தார்; தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ரகுராம் சிங் கூறுகையில், ஆட்டு கொட்டகைக்குள் புகுந்த இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் புலி, ஆட்டை கொன்றுள்ளது. அச்சத்தில் மக்கள் தாக்கியதில் புலி படுகாயமடைந்துள்ளது. தற்போது புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து சீனியர் கால்நடை மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கால்நடை மருத்துவர் விஜயராகவன் கூறுகையில், புலிக்கு நல்ல ஓய்வு தேவை; அதன் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x