Published : 09 May 2024 03:24 AM
Last Updated : 09 May 2024 03:24 AM
புதுச்சேரி: புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் 1963-ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீனவர் கிராம மக்கள் ஒன்றுக்கூடி 14 பேர் கொண்ட புதிய கிராம பஞ்சாயத்துக்குழுவை தேர்ந்தெடுப்பர்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்து குழுவினர் தான் கோயிலை நிர்வகிப்பார்கள். இதற்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட பஞ்சாயத்தாரர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஊர்மக்கள் ஒன்று கூடினர்.
அப்போது ஏற்கெனவே இருந்த பஞ்சாயத்தாரர்கள் இன்னும் 2 ஆண்டுகள் பதவியை நீட்டிக்க வேண்டும் என கூறினர். இதற்கு ஊர் மக்கள் ஒப்புக்கொள்ளாததால் இரு கோஷ்டிகளாக பிரிவினை ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் கோயிலை திறக்க வேண்டாம் என ஊர் மக்கள் முடிவெடுத்து கோயிலை மூடிவிட்டனர். இதுகுறித்து துணை ஆட்சியர், வட்டாட்சியர், ஒதியஞ்சாலை போலீஸார் ஆகியோர் ஊர் மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த 8 மாதங்களாக கோயில் மூடியே இருந்தது. இந்நிலையில் துணை ஆட்சியர் அர்ஜூன், ஊர் மக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தேர்தல் முடிந்தவுடன் கோயிலுக்கு புதிய பஞ்சாயத்தார்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.
அதுவரையில் இரு தரப்பில் இருந்தும் பெண்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களிடம் கோயில் சாவி ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (மே 8)மூடப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலை புதுச்சேரி வட்டாட்சியர் பிரித்திவி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் பெண்கள் கோயிலை திறந்தனர். தொடர்ந்து கோயிலை சுத்தம் செய்து பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டனர். வம்பாகீரப்பாளையம் பகுதியில் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT