Last Updated : 08 May, 2024 03:37 PM

3  

Published : 08 May 2024 03:37 PM
Last Updated : 08 May 2024 03:37 PM

லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்வதிலும் ஊழல்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

பாஜக சார்பில் கோவை, ஒலம்பஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு வழங்கிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன். படம்: ஜெ.மனோகரன்.

கோவை: கோடை கால வறட்சி காரணமாக மக்களுக்கு அரசு சார்பில் லாரிகளில் தண்ணீர் விநியோகிக்கப்படுவதிலும் ஊழல் நடக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்

பாஜக சார்பில் கோவை, தெற்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டன. ராமநாதபுரம் 63 - வது வார்டு, ஒலம்பஸ், தேர்முட்டி, ராஜவீதி, தெப்பக்குளம், பூ மார்க்கெட், தெற்கு சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழவில் கலந்துகொண்ட பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதிலும் ஊழல் நடக்கிறது. இதை அரசு கண்காணிக்க வேண்டும். மரக்கன்றுகளை அதிகம் நட வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளதால் மனு கொடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாக பல நாட்கள் உள்ள நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அமலில் உள்ள தேர்தல் விதிமுறைகளை திரும்பப் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சவுக்கு சங்கர் பா.ஜ.க மற்றும் என்னையும் விமர்சனம் செய்து இருக்கிறார். கஞ்சா கேஸ் போடும் பழைய நடைமுறையை அரசு கையில் எடுத்துள்ளது. அவருக்கு வக்காளத்து வாங்க நான் பேசவில்லை. பெண்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு இருந்தால் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி செய்ய வேண்டும். அதிகரித்து வரும் தெரு நாய்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

வாக்களிப்பது கட்டாயம் என்று ஏற்படுத்தும் நிலை உருவாகி வருகிறது. மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். தெற்கு தொகுதியில் வாக்கு சதவீதம் குறைந்தது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்காமல் உள்ளதால் சில சமூக விரோதிகள் எங்கள் அலுவலகத்தை மதுபானம் உட்கொள்ளும் பாராக மாற்றிவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை எம்எல்ஏ வானதி சீனிவாசன் பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x