Published : 08 May 2024 02:52 PM
Last Updated : 08 May 2024 02:52 PM
புதுச்சேரி: கார்கள் அதிகளவில் வருவதைத் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவோருக்கு இ-பாஸ் முறையை அரசு அமல்படுத்த அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது, “இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் அந்தப் பகுதி மக்களின் நலனுக்காக இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுலா மாநிலமான புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் பல ஆயிரம் கார்கள் வரை வருகின்றது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. மக்கள் நெருக்கடியை கட்டுப்படுத்தவும், சுற்றுலாவின் வருகையை கட்டுப்படுத்தவும், சுற்றுலா என்ற பெயரில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கஞ்சா உள்ளிட்ட சர்வதேச போதை பொருட்களை கடத்தி வர ஏதுவாக புதுச்சேரி உள்ளது.
பல மாநிலங்களில் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தொடர்போடு இங்கு உள்ளவர்கள் சர்வ சாதாரணமாக புதுச்சேரியில் சுற்றி வருகின்றனர். அதை கட்டுப்படுத்த அரசுக்கு எண்ணம் இருந்தால், வெளி மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எதற்காக வருகிறார்கள் என்று ஆராய உடனடியாக இ-பாஸ் முறையை இங்கும் அமல்படுத்த வேண்டும்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி 3 ஆண்டுகள் முடிவடைந்து நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்களித்த மக்களின் பிரதான அடிப்படை கோரிக்கைகளையும் நிறைவேற்றாதது, மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தாதது, மத்திய அரசின் நெருக்கடிகளுக்கு அடிபணிந்து மாநில உரிமைகளை பெறாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் வாக்களித்த மக்கள் இந்த அரசால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
மத்தியிலும், மாநிலத்திலும் டபுள் இஞ்சின் சர்க்கார் நடக்கும் என்றும், பாஜகவுக்கு வாக்களித்தால் எல்லாம் செயல்படுத்துவோம் என்று கூறினர். ஆனால் எதுவும் செயல்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT