Published : 08 May 2024 01:15 PM
Last Updated : 08 May 2024 01:15 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி காங்கிரஸ் பிரமுகர் மரணத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரும் பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60) மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உவரி போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிந்துள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட எஸ்பி என்.சிலம்பரசன் தலைமையில் 7 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற பிரேத பரிசோதனையின் அறிக்கை, போலீஸாருக்கு தற்போது கிடைத்துள்ளது.
ஜெயக்குமார் எழுதியதாக காவல்துறையிடம் கிடைத்த 2 கடிதங்களும் அவரே கைப்பட எழுதியது தான் என்பது, தடய அறிவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெயக்குமார் மே 2-ம் தேதி இரவு அல்லது 3-ம் தேதி அதிகாலையில் இறந்திருக்கலாம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிகிறது. ஆனாலும், இது கொலையா? அல்லது தற்கொலையா? என எந்த முடிவுக்கும் போலீஸார் வர இயலவில்லை.
ஜெயக்குமார் மே 2-ம் தேதி இரவு 8 மணியளவில் திசையன்விளை கடை வீதியில் பொருட்கள் வாங்கிய சிசிடிவி காட்சிகள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. அன்று இரவு 10.30 மணியளவில் ஜெயக்குமாரை குடும்பத்தினரால் செல்போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், அவரை காணவில்லை என்று மே 3-ம் தேதிதான் உவரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர், வீட்டுத் தோட்டத்தில் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததை மே 4-ம் தேதிதான் குடும்பத்தினர் பார்த்துள்ளனர். தோட்டத்தில் கிடக்கும் சடலத்தையோ, தோட்டத்தின் அருகில் நிற்கும் காரையோ யாரும் பார்க்காமல் போனது எப்படி? வீட்டின் பின்புறம் உள்ள சிசிடிவி கேமராக் கள் செயல்படாமல் போனது எப்படி? என்ற கேள்வி தனிப்படையினரிடம் எழுந்துள்ளது.
குடும்பத்தினருடன் தகராறு: கடந்த ஏப்ரல் 30-ம் தேதி ஜெயக்குமார் எழுதிய 2 கடிதங்களில் முதலில் ஒன்றை மட்டும்தான் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். அதே தேதியில் அவரது மருமகனுக்கு எழுதிய கடிதம், ஒருநாள் தாமதமாக வெளியானது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இடையன்குடி சிஎஸ்ஐ தேவாலய பள்ளி கட்டிடம் மற்றும் ஒரு கட்டிடம் கட்டியதற்கான கான்ட்ராக்ட் தொகையை பெறுவதில் ஜெயக்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் இந்த வழக்கில் ஜெயக்குமாரின் குடும்பத்தினரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ் கோடி ஆதித்தன், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்க பாலு உள்ளிட்ட பலரிடம் விசாரணை முடிந்து விட்டது. இதனால் இந்த விவகாரத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் போலீஸார் உரிய முடிவை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT